யாழில் கிணற்றில் விழுந்து பறிபோன வயோதிபரின் உயிர்.


கரணவாய் மத்தி கரவெட்டி J/362 கிராமசேவகர் பகுதியில் வசிக்கும் கண் பார்வை மிகவும் குறைந்த 72 வயதுடைய மாணிக்கம் தெய்வேந்திரம் அவர்கள் ஐந்து குடும்பங்கள் விவசாய தேவைக்காக பயன்படுத்தும் பொதுக் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபரின் சடலம் தொடர்பாக தகவல் அறிந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் சடலத்தை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்.

அதன் பின்னர் அங்கு வந்த மரணவிசாரணை அதிகாரி பாஸ்கரன் விபத்து நடந்த பகுதியின் சுற்றுப்புறம் மிகவும் பற்றைகள் அடர்ந்து காணப்பட்டதால் அவை தொடர்பாக சுகாதாரப் பரிசோதகர் நடவடிக்கை எடுப்பதற்காக அப்பகுதி சுகாதாரப் பரிசோதகருடன் தொடர்பு கொண்ட போது, ‘இந்த வேலைகள் என்னுடைய வேலை அல்ல‘ என பொறுப்பற்ற முறையில் பதிலளித்து தொலைபேசித் தொடர்பை துண்டித்துள்ளார்.

குறித்த பகுதிக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.சுரேஸ்குமார் வடமராட்சியில் இரவு பகல் பாராது மக்களின் சுகாதாரத்தை பேணவேண்டுமென வேலைத் திட்டங்களை செய்யும் போது இவ்வாறான சுகாதாரப் பரிசோதகர்கள் கடமையைச் சரிவரச் செய்யாமல் மக்களின் வரிப்பணத்தில் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு அசண்டையீனமாகத் திரிவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.