இன்று அதிகாலை கோர விபத்து- ஒருவர் பலி, இருவர் படுகாயம்

இன்று (03) அதிகாலை முகமாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

முகமாலையில் வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், டிப்பர் வாகனமொன்றை மறித்து சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹைஏஸ் வாகனமொன்று தரித்து நின்ற டிப்பரின் பின்பக்கமாக மோதி விபத்திற்குள்ளானது.

இதில் வாகனச்சாரதியான மீசாலையை சேர்ந்த நிமலரூபன் (26) என்பவர் உயிரிழந்தார்.

தென்மராட்சியின் பிரபல வாகன உரிமையாளர் கந்தையா, மற்றும் ஏழாலையை சேர்ந்த சந்திரமூர்த்தி சுபாஸ்கரன் (31) காயமடைந்தனர்.

கொழும்பில் வாகனமொன்றை கொள்வனவு செய்ய, பணம் செலுத்திவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.