யாழ்ப்பாண ஆட்டொக்காரர்களுக்கு ஆப்பு வைத்த முதல்வர் ஆர்னோல்ட்.

யாழ். மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் பொருத்துவது கட்டாயம் என அறிவிப்பட்டிருந்தது.

எனினும் இந்த நடைமுறை முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலையில், மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய வெளியாகிய ஊடக அறிக்கையில்,

ஊடக அறிக்கை
மாநகர முதல்வர் செயலகம்
யாழ் மாநகர சபை

முச்சக்கர வண்டிகளிற்கு மீற்றர் பொருத்துதல்

இன்று 2019.01.10 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில்,

“2018.12.31 இன் பின்னர் யாழ் மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் 2019.01.01 ஆம் திகதி தொடக்கம் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என அறியத்தரப்பட்டிருந்தது. இருப்பினும் இந் நடைமுறை முறையாக முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவுகளைக் கொண்டுள்ள மாநகர எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் உரிமையாளர்களை அறிவுறுத்துவதோடு, மீற்றர் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸ் மற்றும் உரிய திணைக்களங்களினால் இம்மாதம் கண்காணிக்கப்பட்டு எதிர்வரும் 2019.01.25 – 2019.01.31 திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் மீற்றர் பொருத்தாத உரிமையாளர்கள் எச்சரிக்கப்படுவார்கள் என்பதோடு, .2019.02.01 இலிருந்து கட்டாயமாக மீற்றர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, அவ்வாறு மீற்றர் பொருத்தாத மாநகர எல்லைக்குற்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கான தரிப்பிட அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு, தரிப்பிடம் மீளப்பெறப்படும்” என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்படி தீர்மானத்தை கருத்திற்கொண்டு உரிய முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு முச்சக்கர வண்டி உரிமையாளர்களை மீற்றர் பொருத்த தயார்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி
இவ்வண்ணம்
இம்மானுவல் ஆனல்ட்
முதல்வர் – யாழ் மாநகர சபை

முதல்வரின் ஊடகப் பிரிவு