கொக்குவிலில் பிடிக்கப்பட்ட காவாலிகள் மாபிள் விளையாட போனவர்களாம்!!

யாழ்ப்பாணம், கொக்குவில் காந்திஜி சனச சமூகப் பகுதியில் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட வன்முறை கும்பலை சேர்ந்த ஐந்து பேரையும் வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் உத்தரவிட்டார்.

“சந்தேநபர்கள் நால்வருக்கு எந்தத் தொடர்புமில்லை. இருவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பவர்கள். அவர்கள் மாபிள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த வேளை சிறப்பு அதிரடிப்படையினர் வந்து அவர்களைக் கைது செய்தனர்.

மற்றொருவர் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் வசிப்பவர். அவர் வெற்றிலை வாங்குவதற்காக கடைக்குச் சென்றுவிட்டு வந்தார். அடாவடியில் ஈடுபட வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். அப்பாவிகளையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனவே சந்தேகநபர்களுக்கு மன்று பிணை வழங்கவேண்டும்” என்று சந்தேகநபர்கள் நால்வர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

“புத்தாண்டு தினத்தில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். பொது மக்கள் ஒன்றுதிரண்டதால்தான் சந்தேகநபர்களும் அவர்களுடன் வந்தவர்களும் அடாவடியில் ஈடுபடவில்லை. இரண்டு பேர் பொது மக்களால் பிடிக்கப்பட்டவர்கள். மேலும் இருவர் தொடர்பில் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களால் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரைப் பொலிஸார் கைது செய்தனர்” என்று யாழ்ப்பாணம் பொலிஸார் , பிணை விண்ணப்பத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

வழக்கை ஆராய்ந்த நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், சந்தேகநபர்கள் ஐவரையும் வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.