யாழில் 13 வயதுச் சிறுமியைக் காதலித்து உறவு கொண்ட இளைஞன்.

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இடத்தில் சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் தடுத்துவைத்திருந்தார் என்று அவரது தாயாரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தினர். அத்துடன் இளைஞனைக் கைது செய்தனர்.

13 வயது நிரம்பிய சிறுமியை சட்டபூர்வ பாதுகாவலரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞனை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி மேனகா ஜீவதர்சன் முன்னிலையானார்.

“சந்தேகநபரை சிறுமி காதலித்தார். அதனால் சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்ற சிறுமி சென்றுள்ளார். தான் தனது வீட்டுக்குத் திரும்பமாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார்.

அதனால் சிறுமியின் தாயார் வந்து அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின்னரே இளைஞனுக்கு எதிராக சிறுமியின் தாயார் முறைப்பாடு வழங்கியுள்ளார். எனினும் சிறுமியை இளைஞன் வன்புணர்வுக்குட்படுத்தவில்லை. அவரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சந்தேகநபரின் சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், “சிறுமியை இளைஞன் வன்புணர்வுக்குட்படுத்தினார் என்றே பொலிஸார் குற்றச்சாட்டுப் பதிவிட்டுள்ளனர். எனவே அவரை பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை வழங்க முடியாது” என்று கட்டளையிட்டார்

அத்துடன், சந்தேகநபரை வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.