இலங்கையில் 8 வருடங்களாக மகளை பாலியல் கொடுமை செய்த கொடூர தந்தை!

அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மகளை, எட்டு வருடங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பதிவாகியுளது.

இதனால் குறித்த நபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபரின் மனைவி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தமைக்கு அமைய பொலிஸார் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 வயதுடைய குறித்த சிறுமிக்கு அவரது எட்டு வயதிலிருந்து தொடர்ச்சியாக எட்டு வருடங்களாக பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சிறு வயதிலிருந்து குறித்த சிறுமி தனது தந்தையுடன் நித்திரை செய்து வந்துள்ள நிலையிலேயே தந்தையால் இந்த கொடுமை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் சிறுமிக்கு கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் இச் சம்பவம் தொடர்பில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் சந்தேக நபர் தனது மகளை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதனால் அச்சமுற்ற சிறுமி தாயிடம் உண்மையை கூறாமல் மறைத்து வந்துள்ளார். இந்நிலையில் சித்திரவதையை பொறுத்துக் கொள்ளாத சிறுமி தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மனைவி, தனது கணவனிடம் இச் சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார். எனினும் இது தொடர்பில் முற்றாக மறைத்த கணவன் மனைவியிடம் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் கருத்து முரண்பாடு அதிகரித்ததை தொடர்ந்து குறித்த நபர் தனது வீட்டில் இருந்து வெளியேறி தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக குருநாகல் மருத்துவமனையில் சேர்த்தும் உள்ளனர்.