யாழில் ஆவா குழு சண்ணா வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்..

யாழில் மீண்டும் ஆவாக் குழு எனப்படும் வன்முறைக் குழுவினால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தன்னிச்சையாக எழுச்சி பெற்றதாகவும், ஒட்டுக் குழுவினராலும் வழி நடத்தப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இக்குழுவினர் அடிக்கடி வாள்வெட்டுத் தாக்குதல்களை யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் இவர்களை பிடிக்கும் நோக்கில் பொலிஸார் களமிறங்கியிருந்தனர். எனினும் அக்குழுவினர் தப்பித்துக் கொண்டிருப்பதும், அதன் உறுப்பினர்கள் என சிலரும் கைது செய்யப்பட்டிருந்தமையும் தெரிந்ததே.

ஆனால் இன்று மாலை அக்குழுவின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளவருமான சன்னா என்பவருடைய வீட்டுக்குள் புகுந்து ஆவா குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளது.

பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இக்குழுவானது இரண்டாகப் பிரிவடைந்துள்ளதாகவும், இதன் மூலம் தலைமறைவாகியுள்ள சன்னா என்பவரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மானிப்பாய், கட்டப்பாழி ஒழுங்கையில் உள்ள வீட்டின் மீதே இன்று மாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக்குள் நுழைந்த குழுவொன்று வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை பெற்றோல் ஊற்றி எரியூட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close