ஒரு அடார் லவ், முத்தக் காட்சிக்கு கிளம்பியது எதிர்ப்பு ?

கண்ணடித்து பரபரப்பை ஏற்படுத்திய பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள முதல் படமான 'ஒரு அடார் லவ்' படம், அதே பெயரில் தமிழில், டப் செய்யப்பட்டு மலையாளத்தில் வெளியாகும் அதே காதலர் தினத்தில் வெளியாக உள்ளது.

தெலுங்கில் இந்தப் படத்திற்கு 'லவ்வர்ஸ் டே' எனப் பெயர் வைத்து வெளியிட, தமிழில் மட்டும் மலையாளப் பெயருடனேயே படத்தை வெளியிடுகிறார்கள். எந்த ஒரு தமிழ் சினிமா நிகழ்விலும் கவிதை நடையில் தமிழிலேயே பேசும் தயாரிப்பாளர் தாணு, இந்தப் படத்தை எப்படி மலையாளப் பெயரிலேயே வெளியிட முடிவெடுத்துள்ளார் என்பது ஆச்சரியமே.

இப்படத்தின் காட்சி வீடியோ ஒன்று யு-டியூபில் வெளியிடப்பட்டது. அதில் படத்தின் நாயகி பிரியாவை நாயகன் ரோஷன் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. பட வெளியீட்டிற்கு முன்பாக பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இப்படிப்பட்ட முத்தக் காட்சியை வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

பள்ளி சீருடை அணிந்துள்ள மாணவரும், மாணவியும் இப்படி முத்தமிடும் காட்சியை விளம்பரத்திற்காக வெளியிட்டிருப்பது, கண்டிக்க வேண்டிய ஒன்று என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.