சந்தியாவை துண்டு துண்டாக அறுத்த சைக்கோ பாலகிருஷ்ணன்.

சென்னையை அடுத்த பெருங்குடி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒரு பகுதியில் சென்னை மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது.

இந்த கிடங்கிற்கு கடந்த 21-ந் தேதி மாலை கோடம்பாக்கம் பகுதியில் இருந்து லாரியில் குப்பை கொண்டு வந்து கொட்டப்பட்டது. அப்போது அந்த குப்பை குவியலில் வெட்டப்பட்ட நிலையில் கை மற்றும் 2 கால்கள் இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, அதுபற்றி பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்த்ததில், குப்பை கிடங்கில் கிடந்ததது பெண்ணின் வலது கை மற்றும் கால்கள் என தெரிய வந்தது. கையில் ‘டிராகன்’ படமும், தோள் பட்டையில் சிவன், பார்வதி உருவமும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. காலில் மெட்டி போட்டதற்கான அடையாளம் இருந்தது.

கைப்பற்றப்பட்ட கை மற்றும் கால்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு கடந்த 24-ந் தேதி ஆய்வு செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்டன.

துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் யார்? தலை உள்ளிட்ட உடலின் மற்ற பாகங்கள் எங்கே? என்பது பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் பரங்கி மலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, கண்ணன், ராஜேந்திரன், ரவி, ஏட்டுகள் பாஸ்கர், ராஜேஷ், கோபால், கலைச்செல்வன், போலீஸ்காரர் செல்வராஜ் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் கை, கால்கள் கொண்ட படங்களை வைத்து, கொலை செய்யப்பட்ட பெண் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏதாவது காணாமல் போன பெண்ணாக இருக்குமா? என்று விசாரித்தனர். அதில் எந்த துப்பும் கிடைக்காததால் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு சென்று விசாரித்தனர்.

பின்னர் வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வேலைக்கு ஆட்களை அழைத்து வரும் ஏஜெண்டுகளிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் கை, கால்கள் அடங்கிய புகைப்படங்களுடன் கூடிய துண்டு அறிக்கைகளை தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு பள்ளிக்கரணை போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கடலூர், கோவை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காணாமல் போன 3 பெண்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தன. கோவையைச் சேர்ந்த பெண்ணை பற்றிய விவரங்களை விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை.

தூத்துக்குடியில் இருந்து வந்த தகவலில் சந்தியா (வயது 37) என்பவர் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்த தகவல் கிடைத்தது. ஆனால் அவரை பற்றி போலீஸ் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் அவரது கணவரான சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன் (51) என்பவர் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

எனவே கணவருடன்தான் சந்தியா இருப்பார் என்ற எண்ணத்தில் தனிப்படை போலீசார் பாலகிருஷ்ணன் பற்றி விசாரணை நடத்தி, அவர் சென்னை ஜாபர்கான்பேட்டை பாரி நகர் காந்தி தெருவில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பதை கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரித்த போது, தனக்கும், மனைவி சந்தியாவுக்கும் தொடர்பு இல்லை என்றும், அவரை பற்றி எதுவும் தெரியாது என்றும், அவர் தன்னிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் பாலகிருஷ்ணன் கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். அப்போது, கடந்த 2 வாரங்களுக்கு முன் பாலகிருஷ்ணனுடன் ஒரு பெண் தங்கி இருந்ததாக சிலர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் பாலகிருஷ்ணனிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, மனைவி சந்தியாவை தான் கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி உடல் பாகங்களை தனித்தனியாக வீசியதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடலின் மற்ற பாகங்கள் எங்கே? என்று விசாரித்தனர். அப்போது, இடுப்பில் இருந்து தொடை வரை உள்ள உடல்பாகத்தை கோணிப்பையில் கட்டி, கிண்டி ஈக்காட்டுத்தாங்கல்- ஜாபர்கான்பேட்டை இடையே உள்ள பாலத்தின் அடியில் தூக்கிப்போட்டதாக கூறினார்.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று, பாலத்தின் அடியில் கோணிப்பையில் இருந்த இடுப்பில் இருந்து தொடை வரையான உடல் பாகத்தை அழுகிய நிலையில் மீட்டனர்.

இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

சந்தியா சில படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார்.

விசாரணையின் போது ஒரு கை, தலை மற்றும் பிற உடல் பாகங்களை வெட்டி தனித்தனி கோணிப்பையில் போட்டு ஜாபர்கான்பேட்டையில் உள்ள குப்பை தொட்டியில் போட்டதாக பாலகிருஷ்ணன் தெரிவித்தார். அந்த உடல் பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசாரிடம் பாலகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது சொந்த ஊர் தூத்துக்குடி டூவிபுரம் ஆகும். சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா மோகம் அதிகம். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் எனக்கும், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியாவுக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு மாயவர்மன் என்ற மகனும், யோகமுத்ரா என்ற மகளும் உள்ளனர். மகன் பிளஸ்-1 வகுப்பும், மகள் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 4 ஆண்டுகளுக்கு முன் ‘காதல் இலவசம்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்தேன்.

இந்த நிலையில் சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் அதை நான் விரும்பவில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, என்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கூறி சந்தியா விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் விவாகரத்து செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

எங்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகமானதால் மகனையும், மகளையும் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் விட்டுவிட்டு சினிமா வாய்ப்புகளை தேடி மீண்டும் சென்னைக்கு வந்தேன். அப்போது எனது மனைவி சந்தியா சைதாப்பேட்டையில் பெண்கள் விடுதியில் தங்கி இருந்து ஆண் நண்பர்கள் மூலமாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்துகொண்டு இருப்பதாக அறிந்தேன்.

மேலும் சினிமா ஆசையால் அவரது நடவடிக்கைகளும் மாறி இருந்தன. இதனால் அவரை கண்டித்தேன். பின்னர் டிசம்பர் மாதம் ஊருக்கு சென்றுவிட்டார். பொங்கல் பண்டிகை முடிந்ததும் மீண்டும் சென்னை வந்தார். இதை அறிந்த நான், சந்தியாவை கடந்த 15-ந் தேதி வீட்டுக்கு அழைத்து வந்தேன். “நீ சினிமாவில் நடிக்க வேண்டாம். வீட்டிலேயே இரு. பிள்ளைகளை அழைத்து வந்து ஒன்றாக வாழலாம்” என்று கூறினேன்.

இந்த நிலையில், சந்தியா இரவு நேரத்தில் வெளியே செல்ல முயன்றார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கடந்த 19-ந் தேதி இரவு வெளியே செல்ல சந்தியா தயார் ஆனார். அப்போது, வெளியே செல்லக்கூடாது என்று கூறினேன். அதற்கு சந்தியா, “என் இஷ்டப்படி வாழ எனக்கு உரிமை இருக்கிறது” என்றார். இதனால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, வீட்டில் இருந்த சுத்தியால் சந்தியாவின் தலையில் ஓங்கி அடித்தேன். இதனால் சந்தியா மயங்கி விழுந்தார். அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, என்ன செய்வது என்று யோசித்தேன். யாரிடமும் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் உடலை துண்டு, துண்டாக வெட்டி பல இடங்களில் போட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன். மறுநாள் 20-ந் தேதி அரிவாளால் கை, கால், தலை, உடல், இடுப்பு என துண்டு, துண்டாக உடலை கூறுபோட்டேன். அவற்றை 4 பார்சல்களாக கோணிப்பையில் போட்டேன். இடுப்பு முதல் தொடை வரையிலான பாகங்கள் அடங்கிய பார்சலை பாலத்தின் அடியிலும், தலை, உடல் பாகங்கள் கொண்ட 2 பார்சல்களை ஜாபர்கான்பேட்டையில் வெவ்வேறு குப்பை தொட்டிகளிலும் 2 கால், ஒரு கை கொண்ட பார்சலை கோடம்பாக்கம் குப்பை தொட்டியிலும் போட்டேன்.

பின்னர் வீட்டை சுத்தம் செய்து எதுவும் நடக்காதது போல், வழக்கமான வேலைகளை செய்து வந்தேன்.

இந்த நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள குப்பை தொட்டியில் போட்ட கை, கால்கள் போலீசாரிடம் சிக்கியதாக செய்தி பார்த்தேன். என்றாலும் என்னை பிடிக்க முடியாது என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் போலீசார் துப்பு துலக்கி பிடித்து விட்டனர்.

இவ்வாறு விசாரணையின் போது பாலகிருஷ்ணன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சினிமா ஆசையால் கணவரை பிரிந்து வாழ்ந்த சந்தியாவுக்கு நிறைய ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டதும், இதனால் அவரது பழக்க வழக்கங்கள் மாறியதும், அடிக்கடி இரவு நேரத்தில் வெளியே சுற்றி வந்ததாகவும் தெரியவந்து உள்ளது.

சந்தியா கொலை பற்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரது தந்தை, தாயார் மற்றும் தங்கை ஆகியோர் அங்கிருந்து சென்னை வந்தனர்.

சினிமா ஆசையால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதும், மனைவி கொலை செய்யப்பட்டு துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.