Loading... Please Wait.

யாழ் குருநகரில் மாயமான இரு குடும்பஸ்தர்கள். அதிர்ச்சியில் மக்கள்.

யாழ். குருநகரில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாசையூரைச் சேர்ந்த 55 வயதான லியோரி பாஸ்கரன் மற்றும் 27 வயதான எல்டின் ராஜ் பிரபு ஆகியோரே மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர்.

யாழ். குருநகர் இறங்குதுறையில் இருந்து கடந்த 18ஆம் திகதி விசைப்படகு மூலம் இரண்டு மீனவர்களும் கடலுக்கு சென்றுள்ளனர்.

நெடுந்தீவிற்கு மேற்கே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக குறித்த மீனவர்கள் தொலைபேசி மூலம் குருநகர் மீனவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

எனினும், குருநகர் மீனவர்கள் காணாமல் போன மீனவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது, அவர்கள் அங்கிருக்கவில்லை.

இந்த நிலையில், காணாமல் போன இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளை குருநகர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
close