"என்னை கழட்டி விட பாக்கிறியா..?" பெண் போலீஸ் தற்கொலைக்கு முன்பு காதலனிடம் கதறல்...

"என்னை கழட்டி விட பாக்கிறியா? கட்டினா உன்னைதான் கட்டுவேன்" என்று பெண் போலீஸ் தற்கொலைக்கு முன்பு காதலனிடம் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அத்துடன் இன்று வேறு ஒரு பெண்ணுடன் கல்யாணம் நடப்பதாக இருந்த புது மாப்பிள்ளையை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வி என்ற 23 வயது பெண், திருச்சி மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார். அப்போது உடன் பணியாற்றி வந்த வெற்றிவேல் என்பவரை காதலித்து வந்திருக்கிறார்.

ஆனால் செல்வி வேறு சாதி என்பதால், வெற்றிவேலின் அண்ணனும், அண்ணியும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லவில்லை என்பதுடன் செல்வியை சாதியை சொல்லி கேவலமாக திட்டியும் மிரட்டியும் உள்ளனர். மேலும் வேறு ஒரு இடத்தில் பெண்ணை பேசி முடித்து இன்று கல்யாணமும் நடைபெற இருந்தது.

இதனால் செந்தமிழ்செல்வி 2 நாளைக்கு முன்பு மனம் உடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக செல்வியின் தந்தை அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காதலன், அவரது அண்ணன் கைலாசம், அண்ணி ராஜசுந்தரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் 3 பேருமே தலைமறைவாக இருந்ததால் அவர்களை தனிப்படை அமைத்து திருச்சி கேகே நகர் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் திருமானூர் பகுதியில் நண்பர் வீட்டில் வெற்றிவேல் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு 2 மாதமாகத்தான் செந்தமிழ்செல்வியை தெரியும். வேறு பெண்ணைதான் நான் காதலித்தேனே தவிர, செல்வியை காதலிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே போலீசார் செந்தமிழ்செல்வியின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில், "வேற பெண்ணை கல்யாணம் செய்ய போறியா?" என்று கண்ணீர் மல்க கேட்டுள்ளது பதிவாகி உள்ளது. காதல் தோல்வி குறித்து செல்வி தனது தந்தையிடமும் அழுதுள்ளதும், அதற்கு தந்தை மகளை சமாதானப்படுத்தியதும் அந்த ஆடியோவில் உள்ளது.

இதை தவிர செந்தமிழ்செல்வியின் டைரி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அதில் வெற்றிவேலை எப்படியெல்லாம் காதலித்து வந்தது குறித்து நிறைய உருக்கமான விஷயங்களை செல்வி எழுதி வைத்துள்ளார்.

தற்கொலை சம்பந்தமாக செல்வியின் இந்த ஆடியோவும், டைரியும் போலீசாருக்கு முக்கிய சாட்சியாக உள்ளதால் இனி விசாரணை தீவிரமடையும் என தெரிகிறது. செல்வியை காதலிக்கவே இல்லை என்று சொன்ன புதுமாப்பிள்ளை போலீசார் பாதுகாப்புடன் "மாமியார்" வீட்டில் உள்ளார்.

வெற்றிவேலின் அண்ணன் கைலாசம், அவரது அண்ணி ராஜசுந்தரி இவர்கள் 3 பேரும் சிறைத்துறையில் பணியாற்றி வருவதால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2 தினங்களாகவே எழுந்து வந்தது. அதன்படி காதலன் வெற்றிவேல் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சிறைத்துறை கண்காணிப்பாளர் பிறப்பித்துள்ளார்.