தோட்டத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியர் கழுத்தை அறுத்து கொலை..!

தார்வார் மாவட்டம் உப்பள்ளி புறநகர் பகுதியில் குந்துகோல் கிராஸ் கோடகொண்டகுனசி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள், வித்யாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வித்யாநகர் போலீசார் அவர் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில், விவசாய நிலத்தில் பிணமாக கிடந்த பெண், உப்பள்ளி மண்டூர் ரோடு லம்பர் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி பால்ராஜ் என்பவரின் மகள் ஸ்டெல்லா (வயது 23) என்பது தெரியவந்தது. மேலும் அவர் உப்பள்ளி வித்யாகிரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

அவரை யாரோ மர்மநபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. ஆனால் அவரை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? போன்ற எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.