உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கிழக்கில் மக்கள் போராட்டத்திற்கு யாழ்பல்கலைக்கழகம் பூரண ஆதரவு.

கிழக்கில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவு தெரிவித்துள்ளது. தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐநாவில் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி நாளை கிழக்கில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கும் போராட்டத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவு வழங்குகின்றது.

தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகள் இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத்தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான தமிழ் மக்களிற்கு எதிரான இனச்சுத்திகரிப்பாகவே உள்ளது.

அத்தகைய இனச்சுத்திகரிப்பின் உச்சமே இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டும், காணாமலாக்கப்பட்டும், ஈழத் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமைச் சட்ட மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள்களிற்குரிய பரிகார நீதியினை சர்வதேசம் தமிழ் மக்களிற்கு பெற்றுத்தர நாம் விழிப்போடு மக்கள் எழுச்சிப் போராட்டங்களினை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் 2015ல் முன்மொழியப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்கு ஊடான உள்ளக பொறிமுறைகளினையே இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறிய நிலையிலும் ஏற்கனவே கால அவகாசங்கள் வழங்கப்பட்ட நிலையிலும் மீண்டும் கால அவகாசமே வழங்கப்படவுள்ளது. இதனை வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதியினை கோரி எதிர் வரும் 19.03.2019 அன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவு வழங்குகின்றது. இவ்வகையில் நீதி கோரி இடம்பெற இருக்கும் மக்கள் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் பங்குபற்றி பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.