யாழில் மினிபஸ்ஸை அடித்து நொறுக்கிய பாடசாலை மாணவர்கள்.

யாழில் மினிபஸ் ஒன்றின் யன்னல் கண்ணாடிகள் பாடசாலை மாணவர்களால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. நேற்று (1) புன்னாலைக்கட்டுவனில் இந்த சம்பவம் நடந்தது.

யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகள் இரண்டின் மாணவர்கள் நேற்று வசாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தில் சினேகபூர்வ கிரிக்கெட் ஆட்டத்தில் பங்கேற்றுவிட்டு, சேவை முடிந்து யாழ் நோக்கி பயணித்த வெற்று மினிபஸ்ஸை மறித்துள்ளனர். உரும்பிராய் வரை பயணிக்க மாணவர்கள் கேட்டதையடுத்து, சாரதி ஏற்றியுள்ளார்.

எனினும், மாணவர்கள் மினிபஸ்ஸிற்குள் இருந்து எல்லைமீறி நடந்து கொண்டதையடுத்து, நடத்துனர் மாணவன் ஒருவனை தாக்கியதுடன், அனைவரையும் புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இறக்கி விட்டுள்ளார். இதன்பேது மாணவர்களிற்கும், நடத்துனருக்குமிடையில் முரண்பாடு முற்றியது.

நடத்துனர் இரும்பு கம்பியால் மாணவர்களை தாக்க முயற்சித்ததாகவும், மாணவர் தாக்குதலில் இருந்து தப்பிக்க, மினிபஸ்ஸின் யன்னல் கண்ணாடியொன்று உடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாணவர்கள் ஒன்று சேர்ந்து இரும்புக்கம்பியை பறித்து, மினிபஸ்ஸின் யன்னல் கண்ணாடிகளை அடித்துடைத்து விட்டு, இன்னொரு வாகனத்தில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

பின்னர், மாணவர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, பொலிஸ் முறைப்பாட்டிற்கு செல்லாமல், இரு தரப்பும் இணக்கத்தை ஏற்படுத்தின. மினிபஸ் யன்னல் கண்ணாடிகளை உடைத்ததற்காக மாணவர்கள் தரப்பில் 60,000 ரூபா இழப்பீடு வழங்கப்பட்டது.
close