உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

டிக் டாக் வீடியோ செய்யும் போது துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் பலி!

டெல்லியில் 19 வயது இளைஞரும் அவரது நண்பர்கள் இருவரும் நாட்டுத்துப்பாக்கியை வைத்து டிக் டாக் வீடியோ செய்யும் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் உயிரிழந்தார்.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்று ‘டிக் டாக்’ செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் என்று மட்டும் இல்லாமல் வயது வித்தியாசங்களை தாண்டி இந்தச் செயலிகளுக்கான வாடிக்கையாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். ஒரு பாடலையோ, இசையையோ, அல்லது வசனத்தையோ பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்ப நடனமாடுவது, வசனம் பேசுவது, நடித்து காட்டுவது போன்றவற்றை இந்தச் செயலி மூலம் செய்யலாம்.  டிக் டாக் வீடியோ செய்யும் போது கவனம் சிதறி அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன.

டெல்லியில் 19 வயது இளைஞரும் அவரது நண்பரும் நாட்டுத்துப்பாக்கியை வைத்து டிக் டாக் வீடியோ செய்யும் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் உயிரிழந்தார். நேற்று இரவு சல்மான் என்ற இளைஞரும், அவரது நண்பர்கள் 2 பேரும் காரில் இந்தியா கேட் பகுதியை பார்வையிட சென்றுள்ளனர். பார்வையிட்டுவிட்டு திரும்பி வருகையில் காரில் அமர்ந்தபடியே டிக் டாக் வீடியோ செய்துள்ளனர்.

தங்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு சல்மானை நோக்கி அவரது நண்பர் டிக் டாக் வீடியோவுக்காக சுடுவது போல நடித்துள்ளார். ஆனால் துப்பாக்கி தவறுதலாக வெடித்து சல்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடனடியாக செய்வதறியாமல் சல்மானின் உறவினர் வீட்டுக்குச் சென்ற நண்பர்கள் உறவினர்களிடம் நடந்ததைக் கூறிவிட்டு மருத்துவமனைக்கு சல்மானை தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் சல்மான் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் டிக் டாக் வீடியோ எடுத்த சல்மானின் நண்பர்கள் இருவரையும், ரத்தக்கறையான ஆடையை மாற்ற உதவிய மற்றொரு நண்பர் என மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.