உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

RIP JK Ritheesh: நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார்.

இலங்கையின் கண்டியில் பிறந்தவர் ஜே.கே.ரித்தீஷ். இவரது இயற்பெயர் முகவை குமார். இவருக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோஷன், ஹாரிக் ரோஷன் என்ற மகன்களும், தானவி என்ற மகளும் உள்ளனர்.

கானல் நீர், பெண் சிங்கம், நாயகன், எல்.கே.ஜி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆனார். பின்னர் திமுகவில் இருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இதையடுத்து எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் ஆகியோருக்கு ஆதரவாக நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது திரையுலகினர், பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவரது உடல் ராமநாதபுரம் ராஜா சேதுபதி நகரில் உள்ள ரித்தீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரித்தீஷின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து மாலை ரித்தீஷின் சொந்த ஊரான மணக்குடியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.