உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்… மாயமான 11 பெண்கள் கதி என்ன?

பெண்கள் காப்பகத்தில் காணாமல் போன 11 பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

பீஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் அரசு நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் காப்பகத்தில், 30க்கும் மேற்பட்ட பெண்களை காப்பக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவர்களுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் காப்பக உரிமையாளர் பிரஜேஷ் தாகூர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தாகூர் உட்பட 21 பேர் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் பிரஜேஷ் தாகூருக்கு சொந்தமான மற்றொரு காப்பகத்தில் 11 பெண்கள் மாயமானது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டது சிபிஐ.

11 பெண்கள் மாயமானது எப்படி என மர்மம் நீடித்து வரும் நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி தீபிகா குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாயமான 11 பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக முக்கிய தடயங்கள் சிக்கியிருப்பதாக கூறிய சிபிஐ அங்குள்ள இடுகாட்டில் மூட்டை மூட்டையாக எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த எலும்புக்கூடுகள் தாகூர் மற்றும் அவரது நண்பர்களால் கொலை செய்யப்பட்ட 11 பெண்களின் எலும்புக்கூடாக இருக்கலாம் என்றும் சிபிஐ போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான குட்டு பட்டேல் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒரு குறிப்பிட்ட இடுகாட்டை காட்டியதாகவும் அதில் தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பதாகவும் சிபிஐ தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காப்பகத்தின் பதிவேட்டை சோதனை செய்த போது ஒரு கட்டத்தில் இந்த 11 பெண்களின் பெயர்களில் 35 பெண்கள் இருந்ததாக தெரியப்படுத்துகிறது என்றும் அவர்கள் இருக்கிறார்களா எங்கு இருக்கிறார்கள் என்ற கள ஆய்வு ரீதியிலான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும் அடுத்த நிலை அறிக்கையில் நிச்சயம் கூடுதல் விவரங்கள் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் சிபிஐ முறையான விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள சிபிஐ, இந்த வழக்கில் சிபிஐ “முழுமையான, நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை” நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன, இந்நிலையில் கொலை என்ற பார்வை பார்க்கப்படவில்லை, சட்டத்தின் முக்கியமான ஷரத்துக்கள் எழுப்பப்படவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை மே 6ம் தேதி விரிவாக விசாரிப்பதாக கூறி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.