உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

22ஆம் திகதி மீள ஆரம்பமாகும் யாழ் பல்கலைக்கழகம்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 22ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பதிவாளரினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கலைப்பீடம் விஞ்ஞான பீடம், முகாமைத்துவ மற்றும் வணிக பீடம், விவசாய பீடம், பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம், சித்த மருத்துவ அலகு என்பனவற்றின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி வழங்கப்பட்ட மாணவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் விடுதிக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த நிலையில், மாணவர்கள் தங்களை பல்கலைக்கழக மாணவர்கள் என்று உறுதிப்படுத்தக்கூடிய வகையில் பல்கலைக்கழக அடையாள அட்டையையோ அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வேறு ஏதாவது ஆவணத்தையோ பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள சந்தர்ப்பத்தில் வைத்திருக்க வேண்டும்.

இதேநேரம், மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களின் மாணவர்களின் பிற்போடப்பட்டிருந்த பரீட்சைகள் யாவும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்றும் பதிவாளரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.