உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

தேர்தல் முடிவுக்கு பின் ஆதங்கமாக பேசிய சீமான்

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் பேசிய சீமான், கொங்கு மண்டலத்தில் அதிக வாக்குகள் வரும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அந்த வாக்குகளை எல்லாம் கமல் வாங்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட்டை இழந்துள்ளது.

இந்நிலையில் இந்த தேர்தல் முடிவு குறித்து சீமானிடம் பிரபல தமிழ் பத்திரிக்கை ஒன்று பேட்டி எடுத்துள்ளது.

அப்போது அவர், இந்த தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பது நன்றாக தெரிய வைத்துள்ளது.

இதற்காக நாங்கள் உழைத்தது சொல்லி புரிய வைக்க முடியாது. ஆனால் அதற்கான அறுவடை என்பது மிகவும் குறைவு என்றே தான் சொல்வேன்.

ஊடகங்கள் கூட எங்களை தீண்டத்தகாதவர்களாத் தான் பார்த்தனர், அது ஏன் கடைசி கட்டத்தில் ஓட்டு இயந்திரத்தில் எங்கள் கட்சியின் சின்னமே தெரியவில்லை, அதை எல்லாம் மீறி மக்கள் எங்களை இந்த அளவிற்கு ஆதரித்துள்ளனர்.

பெரும்பாலான இடங்களில் கமல் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தாலும், தேர்தலில் அவருடைய பங்களிப்பு எதுவும் இல்லை என்றே சொல்வேன்.

அவர் 50 வருடம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார், அவருக்கு மக்களிடம் என்னை விட நல்ல அறிமுகம் உண்டு, அவர் வெள்ளையாக இருக்கிறார். மக்கள் வெள்ளையாக இருப்பவர் பொய் பேச மாட்டார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

அவரை தனித்தன்மை கொண்டவராக பார்ப்பவர்கள்தான் அதிகம். நாங்கள் உழைக்கும் மக்கள். எங்களை அழுக்கு மனிதர்களாகப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் இதே தோல்வியை எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பாரா என்பதே தெரியவில்லை.

ஆனால் நான் நிச்சயமாக அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவேன். 117 இடங்களை ஆண்களுக்கும் 117 இடங்களைப் பெண்களுக்கும் பிரித்துக் கொடுத்துப் போட்டியிட வைப்பேன்.

இப்போதிலிருந்தே அதற்கான வேலைகளை துவங்க இருக்கிறேன். எனக்கு எப்போதுமே கொங்கு மண்டலம் அதிக வாக்குகளை பெற்றுத் தரும், ஆனால் இந்த முறை அந்த வாக்குகளை கமல் வாங்கிவிட்டார்.

அதே சமயம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிக வாக்குகளை நாங்கள் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பரவலாகப் பல தொகுதிகளில் நல்ல வாக்குகளை வாங்கியிருக்கிறோம். ஒரு பொதுக் கட்சியாக மக்கள் எங்களை பார்க்கின்றனர் என்பதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.