உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

தலைவா் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.. அம்பேபிட்டிய சுமணரத்தின தேரா்..!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் இருந்திருந்தால் தமிழ் மக்கள் அவா்களுடைய சொந்த நிலத்தில் மகிழ்வாக வாழ்ந்திருப்பாா்கள். நாட்டின் சுபீட்சத்திற்காக பிரபாகரன் மீண்டும் வரவேண்டுமா? என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பேபிட்டிய சுமணரத்தின தேரா் கூறியுள்ளாா்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,நான் கடந்த முப்பது வருடங்களில் யுத்தத்தை நன்கு அறிந்த பிக்கு, நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் இங்கு இருந்தேன், அப்போது நான் வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளேன்.

அந்த பகுதிகளுக்குச் சென்ற நான் விகாரைகளைப் புணரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து பல உதவிகளைப் பெற்றுள்ளேன். அதன்போது என்னை எவரும் விரல் நீட்டி பேசியதில்லை. எனக்கு அச்சுறுத்தல் விடுத்ததில்லை.

தற்போது உள்ள அரசியல் தலைமைகள், தமிழ் தலைமைகள் உள்ளிட்ட பலர் என்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். யுத்தக்காலத்தில் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த 2000 சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் கிடைக்கவில்லை.

அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இவற்கை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பல முறை ஆட்சியாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது தமிழ் மக்களின் தலைமைகள் என சொல்லிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள்.

இது இனத்துவேசம் என என்மீது குற்றம் சுமத்தினர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான புனானை பிரதேசத்தில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கான திறந்தவெளி பல்கலைக்கழகம் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் அமைக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலப்பரப்பை தமிழ் மக்களுக்கு வழங்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எவ்வாறு அரசாங்கம் அனுமதி கொடுத்தது.தமிழர்களின் பிரதிநிதி என கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனும்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் இதனை நிறுத்த முடியுமா?புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த புனானையில் கட்டடம் கட்டப்பட்டிருக்குமா? கிழக்கு பறிபோயிருக்குமா?எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் நிலவுவதற்கு எதிர்காலத்தில் பிரபாகரனே மீண்டும் வரவேண்டுமா

என எண்ணத் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.