லாட்ஜில்.. நிர்வாண நிலையில் பெண் கொடூர கொலை.. ஒருவர் கைது..

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் நேற்றுமுன்தினம் கணவன் - மனைவி இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். சில மணிநேரங்களுக்குப் பின், அந்த அறையில் இருந்து ஆண் நபர் மட்டும் வெளியே சென்றுள்ளார். வெளியே சென்றவர், நீண்டநேரமாகியும் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லை.

அதேவேளை, அறையில் இருந்த பெண்ணும் வெளியில் வரவில்லை. இதை கவனித்த லாட்ஜ் மேலாளர், அறை கதவைத் தட்டியுள்ளார். கதவு திறக்கப்படவில்லை என்றதும் மாற்று சாவியை எடுத்துவந்து அறையைத் திறந்து பார்த்தபோது, அந்தப் பெண் நிர்வாண நிலையில் ரத்தம் சொட்டியபடி தூக்கில் இறந்துகிடந்துள்ளார். பின்னர் போலீஸுக்கு தகவல் தெரிவிக்க, அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில், அந்தப் பெண், தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்துவரும் மோகனா (36) என்பதும், அவருடன் வந்த நபர், அதே ரயில்நிலைய கேன்டீனில் பணிபுரியும் வீராசாமி (32) என்பதும் தெரியவந்தது. வீராசாமி குறித்த அடையாளம் தெரியவந்ததும் அவரை தேடும்பணியை முடுக்கிவிட்டனர் போலீஸார். தந்தை இறந்த பின், வாரிசு அடிப்படையில் வேலைகிடைக்க, கை நிறைய சம்பளம் வாங்கிவந்த மோகனாவுக்கு, ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இருப்பினும் மோகனாவின் தவறான பழக்கத்தால், சமீபத்தில் அவரைவிட்டு பிரிந்துள்ளார் அவரது கணவர்.

கணவர் பிரிந்துசென்றதால், தனது தாயுடன் திருவொற்றியூர் பகுதியில் வசித்துவந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், தான் வேலைபார்க்கும் ரயில்நிலைய கேன்டீனில் பணிபுரியும் வீராசாமியுடன் மோகனாவுக்கு பழக்கம் ஏற்பட, இருவரும் நெருங்கிப் பழகிவந்துள்ளனர். இந்தத் தகவல்களைத் திரட்டிய போலீஸார், நேற்று திருவொற்றியூர் பகுதியில் சுற்றித்திரிந்த வீராசாமியைக் கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல், போலீஸாரை அதிர்ச்சி அடையவைத்தது. ``கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள முருகன்குடிதான் எனது சொந்த ஊர். 6-ம் வகுப்பு வரை படித்துள்ள நான், தண்டையார்பேட்டை ரயில்வே கேன்டீனில் வேலை செய்துவந்தேன். அங்குதான் மோகனாவை சந்தித்தேன். தினமும் காலையில் சீக்கிரமே பணிக்கு வரும் மோகனா, காலையிலும் பகலிலும் கேன்டினில் சாப்பிட வருவாள்.

அப்போது, எனக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்பட, நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழகிவந்தோம். மோகனாவின் கணவர் பிரிந்துசென்றது எங்களுக்கு வசதியாக இருந்தது. கை நிறைய சம்பாதிக்கும் மோகனா, எனக்கு நிறைய செலவுசெய்வார். இருவரும் அடிக்கடி ஊர்சுற்ற ஆரம்பித்தோம். திருவொற்றியூரில் மோகனாவுடன் அவளின் தாய் மட்டும் இருந்ததால், இரவுநேரத்தில் அவள் வீட்டுக்குச் செல்வேன். ஒருநாள் கஞ்சா போதையில் அங்கு சென்றேன். ஆனால், போதையில் வீட்டு வாசலிலே உறங்கிவிட்டேன். அக்கம்பக்கத்தினர் என்னைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்துவிட்டனர். `மோகனா சொல்லித்தான் வந்தேன்' என போலீஸிடம் கூறினேன். ஆனால், என்னை யார் என்றே தெரியாது என்று மோகனா கூறிவிட்டார். இதனால் 40 நாள்கள் சிறையில் இருக்கவேண்டி இருந்தது.

சிறையில் இருந்த என்னை ஜாமீனில் எடுக்கவும், என்னைப் பார்க்கவும் மோகனா வரவேயில்லை. இதனால் கோபத்தில் இருந்தேன். சிறையில் இருந்து வெளியில் வந்தபிறகு, மீண்டும் அவளுடன் பழகக்கூடாது என நினைத்தேன். ஆனால், 'அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்குப் பயந்து உன்னை தெரியாது. என்னை மன்னித்துவிடு' என மோகனா என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால், இருவரும் மீண்டும் நெருங்கிப் பழகினோம். மோகனாவின் வீட்டுக்கு மீண்டும் சென்றால் பிரச்னையாகும் என்பதால், அடிக்கடி பெரியமேடு லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம். அப்படித்தான் அன்றும் இருவரும் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தோம். சிறிதுநேரம் கழித்து வெளியில் வந்து மது அருந்திவிட்டு வந்தேன்.

மீண்டும் ரூமுக்கு வரும்போது மோகனாவை உறவுக்கு அழைத்தேன். ஆனால் அவள் வர மறுத்து, ``வீட்டுக்குச் செல்கிறேன்'' எனக் கூறியதால், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மோகனாவுக்கு, என்னைப் போல் பலருடன் உறவு இருந்ததை தகராறின்போது கேட்டேன். ‘நீ இதைப்பற்றி எல்லாம் கேட்கக் கூடாது’ என்று ஆபாச வார்த்தையால் திட்டி, என்னை அவள் எட்டி உதைக்க, கோபமடைந்த நான் அவளை கடுமையாகத் தாக்கினேன். சேலையை வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். பின்னர் கொலையை மறைக்க மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு, அவளிடம் இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்'' என வாக்குமூலம் அளித்துள்ளார்.