கம்பெரலிய திட்டத்தில் பாரிய ஊழல்: கணேஷ் அதிர்ச்சி தகவல்கள்!

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் கம்பரெலிய திட்டத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருக்கும் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் கணேஸ் வேலாயுதம் இது சம்மந்தமாக ஐனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

கம்பரலிய திட்டத்தினூடாக பல திட்டங்கள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத் திட்டத்தில் பல முறைகேடுகள் நடக்கின்றன. அதிலும் பல திட்டங்களிலும் ஊழல் மிக மோசமாக தலைவிரித்தாடுகின்றது.

குறிப்பாக கம்பரெலிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் போது அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் ஊழல்களில் ஈடுபடுவதாக பலரும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். ஆயினும் இவ் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

அதேபோல இரணைமடு விவகாரம் தொடர்பிலான அறிக்கையை ஆளுநர் வெளியிடாமல் இருக்கின்றார். ஆகவே அந்த அறிக்கையை இனியும் தாமதப்படுத்தாமல் வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆகவே வடக்கில் இடம்பெற்றதும் இடம்பெற்று வருகின்றதுமான ஊழல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி அந்த ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியமானது. இது குறித்து ஐனாதிபதி மற்றும் பிரதமருக்கும் தெரியப்படுத்தும் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.