யாழில் விசேட அதிரடிப்படை துப்பாக்கி சூடு..! இளைஞன் படுகாயம்..

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காலில் காயமடைந்துள்ளனர்.

அரியாலை முள்ளி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை குறித்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அரியாலை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

அதன் போது மணல் அகழ்வில் ஈடுபட்ட ஏனையவர்கள் தப்பி சென்ற நிலையில் உழவு இயந்திர சாரதி அதிரடி படையினரை நோக்கி உழவு இயந்திரத்தை வேகமாக செலுத்தி சென்ற வேளை அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அதன் போது அரியாலை முள்ளி பகுதியை சேர்ந்த கி.சஜீவன் (வயது 20) எனும் நபர் காலில் காயமடைந்துள்ளார். காலில் காயமடைந்த நபரை அங்கிருந்து மீட்டு

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த விசேட பொலிஸ் அதிரடி படையினர் உழவு இயந்திரத்தை மணலுடன் கைப்பற்றி யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பான போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , சம்பவத்தில் தப்பி சென்ற ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.