பேனர் வைக்க வேண்டாம்' : ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தல்

பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாமென நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை அருகே அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது மகன் திருமணத்துக்காக வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்நிகழ்வை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், முன்னணி ஹீரோக்கள் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென கோிக்கை விடுத்து வருகின்றனர்.

நடிகர் விஜய் பேனர் வைக்க வேண்டாமென தனது ரசிகர் மன்றங்களுக்கு அறுவுறுத்தி உள்ளார். பேனர் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். குறிப்பாக பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். முழுக்க முழுக்க பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் வரும் 19-ம் தேதி வெளியாகும் என்றும் அதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.