`மில்லியன் மாணவர்களின் குரல்!’ - அதிரவைக்கும் சிறுமி. #fridaysforfuture

கிரேட்டா தன்பெர்க், இந்த பெயர் தற்போது உலகத்தின் பல மூலைகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 16 வயதே ஆன ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தனி ஆளாக நின்று குரல் கொடுக்கத் தொடங்கி தற்போது இவர் பின்னால் ஒட்டுமொத்த உலகமும் நிற்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். ஐ.நா-வில் உரை, நோபல் பரிசுக்குப் பரிந்துரை போன்றவற்றை வெறும் சில மாதங்களிலேயே தன்வசப்படுத்தியுள்ளார் கிரேட்டா.

இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஸ்வீடனில் சிறிய பதாகையுடன் தன் போராட்டத்தை முன்னெடுக்கும்போது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னாள்களில் வெள்ளிக்கிழமைதோறும் தன் பள்ளியைப் புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்தி பொதுமக்களின் கவனம் ஈர்த்தார். கிரேட்டாவின் கோரிக்கையை ஏற்றுக் கொஞ்சம் கொஞ்சமாக, மக்கள் அவர் பின்னால் வரத்தொடங்கினர்.

`Friday For Future’ என்ற அமைப்பைத் தொடங்கிப் பல நாடுகளுக்குச் சென்று காலநிலை மாற்றம் குறித்துப் பேசிவருகிறார். ‘உலக வெப்ப மயமாதல், காலநிலை மாற்றம் போன்றவை வெறும் சாதாரண விஷமல்ல இவை அனைத்தும் மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். எனவே, காலநிலை மாற்றத்தின் மீது உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதே கிரேட்டாவின் கோரிக்கை

முதலில் ஸ்வீடனில் உள்ள பல நகரங்களுக்கும் சென்று பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து காலநிலை தொடர்பான அபாயத்தைப் பற்றி எடுத்துரைத்து வந்தார். கடந்த வருடம் தன் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு முழுநேரமாகப் போராட்டக் களத்தில் குதித்தார் கிரேட்டா. காலநிலை மாற்றத்துக்கு எதிராக ஐ.நா-விலும் தன் கருத்தை அழுத்தமாக முன் வைத்தார்.

சிறு வயதிலேயே இயற்கைக்காகப் போராடும் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே நாட்டைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர். இவர்கள் தொடங்கிய நோபல் பரிசுக்கான குரல் உலகம் முழுவதும் வலுக்கத் தொடங்கியது. தற்போது அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் கிரேட்டாவும் ஒருவர்.

இவற்றைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து தன் கோரிக்கையை மக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். தற்போது தன் கோரிக்கை அடங்கிய சிறிய பதாகையைத் தாங்கியபடி உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறார் கிரேட்டா. ‘உலகின் பருவநிலையில் மோசமான மாற்றங்கள் ஏற்பட்டதற்குச் சென்ற தலைமுறையினரே காரணம். நீங்கள் செய்தவற்றை நாங்கள் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பார்த்து 'நார்மல் குழந்தைகளாக இருங்கள்' என்று சொல்லாதீர்கள்’ என கிரேட்டா பேசிய வார்த்தைகள் கவனம் ஈர்த்தவை.

தற்போது காலநிலை மாற்றத்துக்காக நியூயார்க்கில் நடக்கும் மாபெரும் மாநாட்டில் கலந்துகொள்ள கிரேட்டா அமெரிக்கா சென்றுள்ளார். துளியும் புகை வராத, சோலாரில் இயங்கும் படகில் இரண்டு வாரங்களாகப் பயணம் செய்து இங்கிலாந்தில் இருந்து நியூயார்க் சென்றார் கிரேட்டா தன்பெர்க். அங்கு, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

நம்மிடமிருந்து பறிக்கப்படும் எதிர்காலத்துக்காக நாம் ஏன் படிக்க வேண்டும். அது சிலரின் லாபத்துக்காக எப்போதோ விற்கப்பட்டுவிட்டது.
-கிரேட்டா தன்பெர்க்
இந்நிலையில் செப்டம்பர் 20 முதல் 27-ம் தேதி வரை உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாணவர்களும் எதிர்காலத்துக்காகப் போராட வேண்டும் என கிரேட்டா சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். சிறுமியின் அழைப்பை ஏற்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா, கனடா, ஹங்கேரி போன்ற 156 நாடுகளைச் சேர்ந்த பல மில்லியன் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி, ‘பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் போராட்டம் நடத்தினர்.

இது ஒரு எமர்ஜென்சி நிலை. நம் வீடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருகின்றன. காலநிலை மாற்றம் மோசமடைவதை தடுக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

அதிகாரத்தில் உள்ளவர்களின் அழகான வார்த்தைகள் ஒன்றாகவே உள்ளது. எங்களுடன் செல்ஃபி எடுக்க விரும்பும் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் எண்ணிக்கை ஒன்றே, அவர்களின் வெற்று வாக்குறுதிகளும் ஒன்றே, பொய்களும் ஒன்றே செயலற்ற தன்மையும் ஒன்றே.

தலைவர்கள் அனைவரும் காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் துணையிருப்பதைப் போலக் காட்டிக்கொண்டு தலைமை பொறுப்பை மட்டுமே அடைய நினைக்கிறார்கள். நாம் எதிர்காலத்துக்காகப் போராடுபவர்களாக இருந்திருக்கக் கூடாது. ஆனால், நாம் இப்போது அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். நாம் பாதுகாப்பான எதிர்காலத்தை மட்டுமே கேட்கிறோம்” என நியூயார்க்கில் அனல் பறக்கப் பேசியுள்ளார் கிரேட்டா.