காதலியின் மொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற இளைஞன்: பொலிஸாருக்கு அதிர்ச்சி.

காதலி தன்னைவிட்டு பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேரையும் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த 25 வயதான ஆன்ட்ரியாஸ் என்கிற இளைஞர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தன்னுடைய காதலி, நாடின் ஹின்டர்ஹோல்சர் (19) உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அந்த இளம்பெண்ணும் காதலை முறித்துக்கொண்டு, ஃப்ளோரியன் (24) என்கிற இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததை பார்த்து பொறாமையடைந்த ஆன்ட்ரியாஸ், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாடின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வாசலிலே அவரை பார்த்த இளம்பெண்ணின் தந்தை வீட்டை விட்டு வெளியேறுமாறு திட்டு அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆன்ட்ரியாஸ், தன்னுடைய வீட்டிற்கு சென்று கைத்துப்பாக்கியை எடுத்து வந்துள்ளான். முதலில் நாடினின் தந்தை ரூபர்ட், பின்னர் அவரது தாயார் ஆண்ட்ரியா (51) மற்றும் சகோதரர் கெவின் (25) ஆகியோரை சுட்டுக்கொலை செய்துள்ளான்.

பின்னர் அந்த கதவை அடைத்துவிட்டு, பால்கனி வழியாக மேல்தளத்திற்கு சென்றுள்ளான். அங்கிருந்த அறையில் நாடின், தன்னுடைய புதிய காதலனுடன் உறங்கி கொண்டிருந்துள்ளார். அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டு, பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளான்.

காதலியின் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் சுட்டுக்கொலை செய்துவிட்டேன் என ஆன்ட்ரியாஸ் கூறுவதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், உறுதி செய்வதற்காக நாடின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். அங்கு ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்த அனைவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்ட்ரியாஸை கைது செய்துள்ள பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.