வெளிநாட்டில் கணவன்… மனைவி கர்ப்பமானது எப்படி?

தமிழகத்தில் மருமகளுக்கு பிறந்த குழந்தை தங்களது மகனுடைய குழந்தை இல்லை என்று மாமியார் கூறியதால், அப்பெண் கைக்குழந்தையுடன் கணவர் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கட்டேறிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த 15 நாட்களில் முருகன், இந்தோனேஷியாவில் இருக்கும் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் கணவரின் வீட்டில் வசித்து வந்த தேன்மொழி, கடந்த மார்ச் மாதம் 8-ஆம் திகதி கர்ப்பமாக இருப்பதாக சந்தேகமடைந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.

இது குறித்து அவர் முருகனின் பெற்றோரிடம் கூறிய போது, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் திருமணம் முடிந்து 2 வாரங்கள் மட்டுமே குடும்பம் நடத்திய நிலையில், தேன்மொழி கர்ப்பமடைந்ததை ஏற்க மறுத்ததுடன், வீட்டை விட்டு அவரை வெளியேற்றினர்.

இது குறித்து இந்தோனேஷியாவில் இருக்கும் கணவரும், அதிர்ச்சியில் உறைந்து மனைவியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் கோயமுத்தூரில் உறவினர் வீட்டில் மன உளைச்சலுடன் இருந்து வந்த தேன்மொழிக்கு, கடந்த நவம்பர் 6-ஆம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை கணவர் வீட்டாரிடம் சொல்லியும் அவர்கள் வந்து பார்க்கவில்லை.

இதையடுத்து 40 நாட்கள் கழித்து கணவர் வீட்டுக்கு கைக்குழந்தையுடன் வந்த தேன்மொழியை கணவர் வீட்டார் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அவர்கள் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் தன் குழந்தைகக்கு முருகன் தான் தந்தை என்று கூறிய தேன்மொழி, டி.என்.ஏ. சோதனை மேற்கொண்டால் உண்மை தெரியவரும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.