நாயை புலியாக மாற்றிய விவசாயி. இப்படியும் நடக்கிறது.

குரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயி ஒருவர் தனது வளர்ப்பு நாயை புலியாக மாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தின் நல்லூரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கவுடா. இவருடைய நிலத்தில் விளைந்திருந்த பயிர்களை குரங்குகள் நாசம் செய்து வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட அவர், தனது பயிர்களை குரங்களிடமிருந்து காக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

அப்போது, 4 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தர் கன்னடா மாவட்ட விவசாயி ஒருவர் தனது பயிர்களை குரங்களிடமிருந்து பாதுகாக்க புலி போன்ற தோற்றம்கொண்ட பொம்மையை பயன்படுத்தியது அவருடைய நினைவுக்கு வந்தது.

இதையடுத்து, புலி பொம்மைகளை வாங்கிவந்து தனது நிலத்தில் விளைந்துள்ள பயிர்களின் நடுவே வைத்தார். பொம்மை வைத்த இரண்டு நாட்களில் எதிர்பார்த்த மாதிரியே குரங்குகள் பயந்து பயிர்கள் பக்கமே வரவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்தப் பொம்மைகளை எடுத்து வேறு ஒரு பகுதியில் வைத்தார். அங்கும் குரங்குகள் வரவில்லை.

இந்த பொம்மைகளை நீண்ட நாட்கள் நம்ப முடியாது என்று நினைத்த ஸ்ரீகாந்த் கவுடா, மாற்றி யோசிக்க ஆரம்பித்தார். அதன்படி தான் வளர்க்கும் நாய்க்கு புலியைப்போல் வண்ணம் பூச திட்டமிட்டார். இதையடுத்து கறுப்பு நிற ஹேர்டை வாங்கி வந்து தனது சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற நாயின் உடலில் புலிக்கு இருப்பதைப்போல் கோடுகள் வரைந்தார்.

இதன்மூலம் புலியின் தோற்றத்திற்கு மாறிய அந்த நாயை தனது விவசாய நிலத்தில் விட்டுள்ளார். இந்த வண்ணம் நாயின் உடலில் சுமார் ஒரு மாதம் வரை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

குரங்குகளின் சேதத்தில் இருந்து பயிர்களை காக்க விவசாயி ஒருவர் தனது நாய்க்கு புலி போல் வண்ணம் பூசியமை அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.