கழுத்தறுக்கப்பட்ட மாணவி. நடந்தது என்ன? முழுமையான தகவல்.(video)

பண்ணைக் கடற்கரையோரம் இளம் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவியான பேருவளையைச் சேர்ந்த ரோஷினி ஹன்சனா என்பவரே கொலை செய்யப்பட்டவர். இவருக்கு 29 வயது. புதன்கிழமை (22) பிற்பகல் 2 மணியளவில் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஹன்சனாவுடன் பேசிக் கொண்டிருந்த சந்தேகநபர் திடீரென அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவரான களுத்துறையைச் சேர்ந்த எரங்க திலீப்குமார் ஒரு இராணுவச் சிப்பாய். 30 வயதான இவர் பரந்தனில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றுகின்றார். திலிப்குமார் ஹன்சனாவின் காதலன் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் காவல்துறையினரின் விசாரணையில் அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து 3 ஆண்டுகள் ஆகின்றன என்பது தெரியவந்துள்ளது.

ஹன்சனாவைக் கொலை செய்து விட்டு சந்தேகநபர் சாவகாசமாகச் சென்று அங்குள்ள தண்ணீர்க் குழாயில் முகத்தைக் கழுவும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அங்கிருந்து சென்ற சந்தேகநபர் அந்தப் பகுதியில் கடமையில் இருந்த வானூர்திப் படை புலனாய்வு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். 

ஹன்சனா. சந்தேகநபர் தற்போது யாழ்ப்பாணம் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். “சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்” என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர். 

ஹன்சனாவின் உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டுத் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உடல் கூறாய்வுக்குப் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.