யாழில் மதுபோதையில் சாராயப் போத்தலுடன் சிக்கிய பஸ் சாரதி.

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த அரச பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்தமையால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அதில் பயணித்த 46 பயணிகளையும் மற்றொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் இணைந்து பேருந்தை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 7.45 மணிக்கு அக்கரைப்பற்றுக்கு புறப்படும் பேருந்து நாவற்குழி சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு சோதனையிட முற்பட்ட போது, சாரதி மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டது.
சாரதியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட இராணுவத்தினர், பேருந்தை சோதனையிட்ட போது, 2 பியர் ரின்களும் சாராயப் போத்தல் ஒன்றும் சாரதியின் இருக்கைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டன.

சாரதி கடுமையாக எச்சரிக்கைப்பட்டதுடன், அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டது.