கொரோனாவிற்கு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் தலைமறைவு!

கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியிருக்கலாமென சந்தேகிக்கப்படும் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகியுள்ளார். அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவிருந்த நிலையில் தலைமறைவாகியுள்ளார்.

கடந்த வாரம் கட்டார் நாட்டிலிருந்து திரும்பிய இவர், சீன நாட்டவர்களுடன் ஒரு அறையை பகிர்ந்து கொண்டிருந்தார். காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப்பிரச்சனைகளால் சிரமப்படுவதாக தெரிவித்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவிருந்த சமயத்தில் நேற்று தலைமறைவாகியுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை உறுதிசெய்யும் பரிசோதனை வசதிகள் உள்ளன.

இதையடுத்து, துரிதமாக செயற்பட்ட பொலிசார் நேற்று மாலை தலைமறைவானவரின் வீட்டுக்கு சென்றனர். எனினும், அவர் வீட்டில் இருக்கவில்லை. அவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
close