பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…!

பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து விடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறித்து வந்த 2 பேரை, மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த கல்யாணமான பெண் ஒருவர், தன்னுடன் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகப் பழகிய சிலர், தனது போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.. மேலும், தன்னைப் போலவே பல பெண்களை இவர்கள் இதேபோன்று மிரட்டி இதுவரை சுமார் 7.5 லட்சம் ரூபாய் பணம் பறித்து இருப்பதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முகமது முகைதீன், நாகபட்டினத்தைச் சேர்ந்த முகமது ஜாசிம், புதுச்சேரியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் நூர், சென்னையைச் சேர்ந்த பாசித் அலி, திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் சேர்ந்த பார்டு பைசுல் உள்ளிட்ட 6 பேர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் புகாரளித்தனர்.

இந்தநிலையில், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் அறிவுறுத்தலின்படி வழக்குப் பதிந்த குற்றப்பிரிவு போலீசார், குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் சமூக வலைதளப் பக்கங்கள், வங்கிக் கணக்குகள், இணையதள வங்கி பணப் பரிவர்த்தனைகளை தனிப்படை அமைத்து தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

அதில், ஜெர்மனியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வரும் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முகமது முகைதீன் தலைமையிலான கும்பல் ஒன்று, சமூக வலைதளங்களில் பெண்களின் போட்டோக்களை ஆபாசமாகப் பதிவிட்டு பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு பெண்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தில் நண்பர்களுக்கு சிறிது கமிஷன் கொடுத்த பின் அவர்களிடமிருந்து மீதமுள்ள மொத்தப் பணமும், முகமது முகைதீனின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுவதும், இதுபோல மிரட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

இந்தநிலையில், தற்போது இவர்களில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் சேர்ந்த பார்டு பைசுல் ஆகிய 2 பேரையும்  கைது செய்த தனிப்படை போலீசார், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையிலடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான முகமது முகைதீன் உட்பட 4 பேரை  போலீசார் தேடி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.