Trending News...

சுமந்திரனின் 16 STF வீரர்கள் மீதும் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனிற்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற 16 விசேட அதிரப்படையினருக்கும் எதிராக யாழ்மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், தற்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினராக அங்கம் வகிக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி தனுபன் ஆகியோரே முறைப்பாடு செய்துள்ளனர் .

தேர்தல் வாக்கெண்ணும் தினத்தில் (6ஆம் திகதி) யாழ் மத்திய கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் வாக்கெண்ணுதலை பார்வையிடுகின்ற முகவர்களாக நியமிக்கப்பட்டு அதன் நிமித்தம் பணியில் இருந்தோம்.

மிகவும் குறைந்தளவிலான யாழ் தேர்தல் மாவட்ட வாக்குகளை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பான விபரங்களை அறிவிக்காமல் வேண்டுமென்று நீண்ட நேரத்திற்கு இழுத்தடிப்பு செய்தமைக்காக நாங்கள் அமைதியான முறையில் அங்கு ஒன்றுகூடி எதிர்ப்பினை தெரியப்படுத்தியிருந்தோம்.

அங்கு திடீரென்று வந்த சுமந்திரனும் அவரது பாதுகாவர்களும் எங்களையும், கட்சித்தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனையும் இன்னும் பலரையும் தாக்கினர்.

அந்த பகுதி யாழ் மாவட்ட செயலாளரின் கட்டுப்பாட்டில் காணப்பட்டிருந்ததாகவும் ஆனால் அவரது முடிவினை பெற்றுக்கொள்ளாது சுமந்திரனின் பாதுகாவலர்கள் இந்த ஜனநாயக விரோத செயலை தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டு மேற்படி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக பொலிஸாரின் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன்,

தன்னை பொலிஸார் சித்திரவதை செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராகவே இவ்வாறு முறைபாடு பதிவு செய்துள்ளார்.

அதனையடுத்து, தவராசா துவாரகன் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்

யாழ்.பிராந்திய அலுவலகம் கோரியிருந்தது. இந்த நிலையில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி), முன்னாள் விடுதலைப்புலிகள் போராளி தனுபன் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்) ஆகியோரும்

 விசேட அதிரடிப் படையினருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.