பருத்தித்துறையில் அத்துமீறி கடலட்டை பிடித்த புத்தளம் மீனவர்களின் வாடிகள் எரிக்கப்பட்டன!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கடற்கரையோரத்தில் காணப்பட்ட வாடிகள் நான்கு இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

சிலாபம், புத்தளம் உட்பட்ட பகுதிகளிலிருந்து வந்து கடலட்டை பிடிப்பதற்காக தங்கியிருப்பவர்களின் வாடிகளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 4 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதிக்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கடலட்டை பிடிப்பதாகத் தெரிவித்து பல்வேறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் வெளிமாவட்ட மீனவர்கள் ஈடுபட்டுவருவதாக வடமராட்சி, வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தொடர்ந்தும் குற்றம்சாட்டிவரும் நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நீதிமன்றிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.