இனிமேல் இயக்கத்தின் பெயரை மணிவண்ணன் பாவிக்க முடியாது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!


தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற அரசியல் இயக்கத்திலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வி.மணிவண்ணன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இனிமேல் மணிவண்ணன் இயக்கத்தின் பெயரை பாவிக்க முடியாது. இயக்கத்தை விட்டு அவர் நிரந்தரமாக ஏன் நீக்கப்படக்கூடாது என்ற விளக்கத்தை அவர் இரண்டு வாரங்களிற்குள் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இன்று தமிழ் காங்கிரசின் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மணிவண்ணன் கட்சிக் கொள்கைக்கு முரணாகவும், கட்ச தலைமைத்துவத்தை கேள்விக்குட்படுத்தும் விதமாகவும் அவர் தன்னுடைய தேசிய அமைப்பாளர் பதவியையும், பேச்சாளர் பதவியையும பயன்படுத்தினார் என மத்தியகுழு தீர்மானத்திற்கு வந்ததன் பின்னர், அவருக்கு எழுத்துமூலமாக மத்திகுழுவின் முடிவு அறிவிக்கப்பட்டது. அவர் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் பதவிகளிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மணிவண்ணனின் விளக்கத்தையும் எதிர்பார்த்திருந்தோம். அவர் மத்தியகுழுவிற்கு தனது பதிலை அனுப்பியிருந்தார். அதை மத்தியகுழு ஆராய்ந்து, அவரது பதில் ஏற்றுக்கொள்ள முடியாதது, மத்தியகுழுவின் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் செயற்பட முனைந்ததால், உடனடியாக நடைமுறைக்க வரும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவருக்கு  இன்று எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் மூலமாக காலை அனுப்பி வைக்கப்பட்டது. இன்று பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டு வாரங்களிற்குள் அவர் தன்னுடைய பதிலை மத்தியகுழுவிற்கு அனுப்பி வைக்கலாம். உறுப்புரிமையை இடைநிறுத்தியதை நிரந்தரமாக கருதப்படாமலிருக்க அவரது நியாயங்களை முன்வைக்கலாம்.

இரண்டு வார அவகாசத்தின் பின்னர் ஒழுக்காற்றுகுழு நியமிக்கப்பட்டு, சாட்சியங்களுடன்- அவர் மீதான குற்றப்பத்திரிகையில் ஆறு குற்றங்களை முன்னிலைப்படுத்தி அவருக்கு எதிரான விசாரணை முன்னெடுக்கப்படும். விசாரணையின் முடிவின் பிரகாரம், அவர் கட்சியில் தொடர்வதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

மணிவண்ணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அவர் கட்சியின் பெயரை பயன்படுத்த எந்த அதிகாரமும் இல்லாததாக அனைத்து தரப்பிற்கும் அறிய தருகிறோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரிலோ, சின்னத்திலோ அவர் இயங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரில் அவர் செயற்பட்டால், அது கட்சி சார்ந்து அல்லாமல், அது கட்சி விதியை மீறியதாகத்தான் கருதப்படும்.

நாங்கள் ஒரு அரசியல் இயக்கம். பெயரை முன்னிறுத்தி, முகத்தை முன்னிறுத்தி செயற்படுவது தொடர்பாகபல முறைப்பாடுகள் வந்தன. நாங்கள் அதில் ஆதாரம் கிடைத்தவற்றிற்கு நடவடிக்கையெடுப்போம். ஒரு எல்லையை மீறியபோதுதான் மணிவண்ணன் விவகாரத்தில் நடவடிக்கையெடுத்தோம். கட்சி தலைமைக்கும், இயக்கத்திற்கும் எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டபோதே அவரை பதவிநீக்கினோம்.

பதவிநீக்கப்பட்ட அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னரும், மத்தியகுழுவின் தீர்மானத்தை அவர் கணக்கிலெடுக்கவில்லையென்ற தோரணையில் நடக்க முற்பட்டபோதே, அவரது உறுப்புரிமையை ஒழுக்காற்றுகுழுவின் ஊடாக நடவடிக்கையெடுத்தோம் என்றார்.