யாழ் மணல் கடத்தல்: தட்டிக்கேட்டவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்..!

யாழ்.வரணிப் பகுதியில் திருட்டு மணல் ஏற்றியவர்களிற்கு பாதை விட மறுத்தவர் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின்போது வரணியை சேர்ந்த கே.கலாசுதன் வயது 46 என்பவர் மீதே மண்வெட்டிப் பிடியால் தாக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைநில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வரணிப்பகுதியில் அகலம் குறைந்த பாதை ஒன்றின் ஊடாக திருட்டு மணல் ஏற்றியவாறு ஐந்து உழவு இயந்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து பயணித்துள்ளன.

அதன்போது அப்பாதையால் இரவு வீடு நோக்கிப் பயணித்தவர் அதனை அவதானித்து கேள்வி கேட்டுள்ளார். இதனால் பாதைவிடுமாறு திருட்டு மணல் ஏற்றியவர்கள் தர்க்கம் செய்துள்ளனர்.

இதன்போது திருட்டு மண் ஏற்ற அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தமையினால் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்ற வைத்திருந்த மண் வெட்டியின் பிடியை கழட்டி வந்து தாக்கியுள்ளனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் தொலைபேசி மூலம் தனது உறவுகளிற்கு தகவல் வழங்கிய நிலையில் அவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன்,

பொலிசாரிடமும் முறையிட்டனர். குறித்த முறைப்பாட்டின் பெயரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் தாக்குதல் மேற்கொண்ட மணல் கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் தேடுதல் நடத்திய பொலிஸார் ஒரேயொரு உழவு இயந்திரத்தை மட்டும் பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளனர்.