கொரோனா ஏற்பட்டவர்களுக்கு நிரந்தரமாக காது கேட்காதா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி!

கொரோனா பாதிப்பால் நிரந்தர காது கேளா பிரச்சினை ஏற்படலாம் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சில நோயாளிகளுக்கு நிரந்தர காது கேளாத பிரச்சினை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காதுகளில் பிரச்சினை ஏற்படுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி வல்லுநர்கள் உள்ளிட்ட விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த நோய்த்தொற்று காரணமாக காது கேளாமை ஏற்படுகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஸ்டெராய்டுகள் மூலம் முறையான சிகிச்சை எடுத்தால் இந்த சிக்கலை சமாளிக்க முடியும்.

இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும், காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுக்குப் பிறகும் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் வல்லுநர்கள் கூறினார்.

'பி.எம்.ஜே கேஸ் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில் ஆஸ்துமா நோயாளியாக இருக்கும் 45 வயது மனிதர் ஒருவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட பின்னர், அவரது செவிப்புலன் திறன் திடீரென பறிபோனது.

இந்த நபருக்கு நோய்த்தொற்றுக்கு முன்னர் காதுகள் தொடர்பான எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. அந்த நபருக்கு ஸ்டெராய்டு மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு அவரது காது கேளும் திறன் ஓரளவு திரும்பியுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில், 'அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், தொற்றால் காதுகளில் ஏற்படும் பிரச்சினை குறித்து மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

ஆராய்ச்சிகள் மூலம்தான் இந்த பிரச்சினையின் மூலம் கண்டறியப்பட்டு அதற்கான நிவாரணத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.' என்று கூறியுள்ளனர்.