உயிரோடிருந்த முதியவரை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்!

 சேலம் மாநகராட்சி கந்தம்பட்டி அருகே வசித்து வரும் சரவணன் என்பவர், அவரது அண்ணன் பாலசுப்பரமணிய குமார் என்பவர் இறந்துவிட்டதாகக் கூறி, உடலை வைத்திடும் குளிர்சாதனப்பெட்டி பணியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார். பெட்டி வந்ததும் குளிர்சாதனப்பெட்டியில் முதியவர் பாலசுப்பிரமணியத்தின் உடலை வைத்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் குளிர்சாதன பெட்டியை திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள், குளிர்சாதனப் பெட்டிக்குள் முதியவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவரது சகோதரரிடம் கூறிய போதிலும் எவ்வித அதிர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், விரைவில் உயிரிழந்து விடுவார் எனக்கூறி வாக்குவாதத்ததில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீசார், குளிர்சாதன பெட்டிக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதியவரை மீட்டு, 108 ஆம்புலன்சு மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்புக்கு முன்பாகவே, ஒருவரை இறந்ததாக கூறி குளிர்சாதனப்பெட்டியில் அடைத்து வைத்த உறவினர்களின் மனிதநேயமற்ற கொடூரச்செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.