முத்தையா முரளிதரனாக மாறிய விஜய் சேதுபதி.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார்.

இது கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால், இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசரஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டியில் முத்தையா முரளிதரனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள். இதில் முத்தையா முரளிதரன் தோற்றத்தில் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இறுதியில் வருகிறது. இது ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

800 படத்தின் படப்பிடிப்பை வரும் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறார்களாம். இலங்கை, இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கிறது.