வாள்வெட்டு காவாலியை நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்த மக்கள்.

முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் நீண்டகாலமாக அட்டகாசம் செய்து வந்த பிரபல ரௌடி, பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


விசுவமடு, ரெட்பானா, தேராவில் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ரௌடிக்குழுவொன்று தினமும் அந்த பிரதேசங்களில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் குடும்பஸ்தர் ஒருவரின் கைகள் இரண்டையும் ரௌடிகள் வெட்டினர்.

பின்னர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் அவரின் கைகள் மீள இணைக்கப்பட்டன. சனி,ஞாயிறு நாட்களில் வாள்வெட்டு குழுவின் தொல்லை தாங்கமுடியாத நிலை காணப்படுவதாகவும் இரவு நேரங்களில் விதவைப்பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளும் ரௌடிகள், வீட்டிற்கு வரவா? இல்லை உன் மகளை கடத்துவோம் அல்லது மகளுக்கு கை எடுப்போம் என மிரட்டல் விடுவதாகவும் இவ்வாறு கதைப்பவர்களின் ஒலி வடிவங்கள் பதிவு செய்யப்பட்டு பொலிசாருக்கு கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தெரிவிக்கின்றனர்.


இந்த நிலையில் இன்று(15) காலை வாளுடன் வந்த ரௌடிகளை கிராம இளைஞர்கள் ஒன்றுதிரண்டு வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் ஒரு ரௌடி சிக்கினான். ஏனையவர்கள் தப்பியோடி விட்டனர். பிடிபட்டவனை கட்டி வைத்து நையப்புடைத்த பின்னர், பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்

தேராவில் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு ரௌடிகளாக வாள்களுடன் நடமாடுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். வாளுடன் கைதுசெய்யப்பட்ட ரௌடியிடம் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.