வடக்கில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியது.


வவுனியாவைச் சேர்ந்த பெண் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்ததை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த வவுனியா வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதுடன், சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் உள்ளிட்ட தாதியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 08ம் இலக்க வாட் பகுதி மூடப்பட்டுள்ளதுடன், மேலதிக சிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இருதய நோயியல் பிரிவில் கடமையாற்றும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் அனைவரும் உடனடியாக கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி அனுராதபுரம் வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இதுவரை 186 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற முதலாவது கொரோனா மரணமாக குறித்த மரணம் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.