யாழ்.நகரில் மறு அறிவித்தல் வரையில் மூடப்படும் சந்தை தொகுதி


யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள மரக்கறிச் சந்தை தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறிச் சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 9 வியாபாரிகளுக்குக் கோவிட் வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் (பனம் பொருட்கள்) வியாரிகளும், 3 மரக்கறி வியாபாரிகளும் அடங்குகின்றனர்.

அதனால் சந்தைத் தொகுதியின் அத்தனை வியாபாரிகளும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.இதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 21 பேர் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 600 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இதன்போதே, 23 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட யாழ்.நகர் 2 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடைய 9 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.இவர்கள் இருவரும் காரைநகர் இ.போ.ச. பஸ் பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள்.

மன்னாரில் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் ஒருவருக்குக் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.கிளிநொச்சி கண்டாவளையில் ஒருவருக்கும் கோவிட்தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.