உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

14 வயது சிறுமி. 12 பேரால் சீரழிந்த கொடுமை. பதிலுக்கு பணம் பெற்ற தாய்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 14 வயது சிறுமியை 12 பேர் இரண்டு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் தாய் மகேஷ்வரி கைது செய்யப்பட்டார்.

நாமக்கல்: 14 வயது சிறுமி… நாசமாக்கிய 12 பேர்: உடந்தையாக இருந்த கொடூர தாய் கைது!

குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள்கள் 2 பேருக்கு திருமணமாகிவிட்டது.

3ஆவது மகளுக்கு 14 வயதாகிறது. இவர் 6-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் அக்காள் கணவர் சின்ராஜ் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை அறிந்த சின்ராஜின் நண்பர்களான எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த குமார் உள்பட சிலரும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தநிலையில் குமார் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததை சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குமாரிடம் பஞ்சாயத்து பேசியுள்ளனர். அப்போது குமார் ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளார். இதை வாங்கி உடல் நலம் பாதித்து இருந்த சிறுமியின் தந்தையின் சிகிச்சைக்கு பயன்படுத்தி உள்ளனர். இதன்பின்னர் அந்த சிறுமி வீட்டு வேலைக்கு சென்றார். அப்போதும் அவளுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்தது.

அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் பலர் தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளாள். இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப்பிரியாவிடம் அக்கம்பக்கத்தினர் புகார் அளித்தனர். இதுபற்றி தீவிர விசாரணை செய்த ரஞ்சிதப்பிரியா நேற்று முன்தினம் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக சின்ராஜ், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி குமார் என்கிற செந்தில்குமார் (30), டிரைவர் வடிவேல் (29), குமாரபாளையம் பி.எஸ்.என்.எல். அலுவலக இளநிலை என்ஜினீயர் கண்ணன் (36), பவானியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மூர்த்தி (55), மினி பஸ் டிரைவர் சேகர் என்கிற நாய் சேகர் (25), திருவள்ளுவர் நகர் கம்பி கட்டும் தொழிலாளி கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் (32), சுந்தரம் நகர் விசைத்தறி தொழிலாளி அபிமன்னன் (37), திருவள்ளுவர் நகரை சேர்ந்தவரும், ஈரோடு ஆர்.என்.புதூர் தபால் அலுவலகத்தில் பணிபுரிபவருமான சரவணன் (30), குள்ளப்பா நகரை சேர்ந்த கொத்தனார் சங்கர் (24), சுந்தரம் நகர் வீட்டின் உரிமையாளர் பன்னீர் (32) ஆகிய 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் சிறுமியின் தாய் மகேஸ்வரியை போலீஸார் கைது செய்தனர். தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தனது தாயிடம் தெரிவித்த போது பாலியல் பலாத்காரம் செய்தவரிடம் பணம் பெற்றுக் கொண்டதாகவும் அவர் தனது மகளின் நிலை குறித்து போலீஸில் புகார் தெரிவிக்கவில்லை என்பதாலும் மகேஸ்வரி கைது செய்யப்பட்டார். சிறுமியின் நிலை குறித்து அக்கம்பக்கத்தினரே நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திடம் பொறுப்பேற்றனர்.