யாழ். நல்லுாரில் சன நடமாட்டம் அதிகமான பகுதியில் கத்தி முனையில் கொள்ளை!

யாழ். நல்லுார் சன நடமாட்டம் அதிகமான பகுதியில் வீடு புகுந்து கத்திமுனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்படப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது.

வீட்டில் முதியவர் ஒருவர் தனித்திருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அவரை கத்தி முனையில் அச்சுறுத்தி சுமார் 9 பவுண் நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளது.

வீட்டின் சமையலறை யன்னலை பிரித்து உட்புகுந்த கொள்ளை கும்பல், வீட்டில் இருந்த மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி நகை பணத்தை எடுத்துத் தருமாறு கோரியுள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த மூதாட்டி 3 பவுண் சங்கிலி, 2 பவுண் சோடிக் காப்பு, ஒரு பவுண் மோதிரம் என்பவற்றை கழற்றிக் கொடுத்துள்ளார்.

அத்துடன் காதில் இருந்த பெறுமதியான தோட்டையும் கழற்றுமாறு அச்சுறுத்தியதனால் மூதாட்டி தோட்டையும் கழற்றி வழங்கியுள்ளார்.

இவற்றைப் பெற்றுக்கொண்ட கொள்ளையன் ஒவ்வொரு அறையாக மேற்கொண்ட தேடுதலில் முதியவரின் கையில் இருந்த மோதிரத்தையும் அபகரித்ததோடு வீட்டில் இருந்த 15 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.

முகத்தை மூடியவாறு கைக்கு கையுறை அணிந்திருந்த கொள்ளையன் பின்னர் வீட்டின் அருகே நீண்டகாலமாக கைவிடப்பட்டுள்ள பாழடைந்த வீட்டின் வழியாக தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.