உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வேறு ஒருவருடன் தொடர்பு.. சுடுகாட்டுக்கு அழைத்து சென்று காதலி கொலை.

வில்லியனூர் அருகே கல்லூரி மாணவியை அடித்துக் கொன்று சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவை திருக்கனூரை அடுத்த சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ராஜஸ்ரீ(17). இவர் சேதராபட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். கல்லூரி முடிந்து மதியம் 3 மணிக்கு போனில் வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பஸ்ஸுக்காக காத்திருக்கிறேன். வந்துவிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காட்டேரிக்குப்பம் போலீஸில் புகார் அளித்தனர். இந்த நிலையில் வில்லியனூரை அடுத்த பொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்மமான முறையில் சாக்கு மூட்டை கிடப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மேற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் விரைந்து சென்றனர். சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் ராஜஸ்ரீயின் சடலம் இருந்தது. உடலை போலீஸார் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பொறையூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ராஜஸ்ரீயை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையில் பொறையூர்பேட்டையயைச் சேர்ந்த பிரதீஷ் இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் ராஜஸ்ரீயும் பிரதீஷும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ராஜஸ்ரீ வேறு ஒருவருடன் பேசி வந்தது பிரதீஷுக்கு தெரியவந்தது. இதனால் அவரை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்ற பிரதீஷ், ராஜஸ்ரீயிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ராஜஸ்ரீயை அடித்ததில் காதில் ரத்தம் வழிந்து மயங்கி இறந்துள்ளார்.

இதையடுத்து தனது 14 வயதான தம்பியின் உதவியுடன் ராஜஸ்ரீயை சாக்குப் பையில் கட்டி ஒரு பள்ளத்தில் போட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 14 வயதே ஆன பிரதீஷின் தம்பியை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.