பீர் பாட்டிலால் சரமாரி குத்தி கர்ப்பிணி மனைவி கொலை: கணவன் கைது


பெரம்பூர்: வியாசர்பாடியில் குடும்ப தகராறில் பீர் பாட்டிலால் சரமாரி குத்தி கர்ப்பிணி மனைவியை படுகொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரவி (26). தள்ளுவண்டி ஓட்டி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (23), இவர்களுக்கு சிவா என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. விஜயலட்சுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ரவி மீது கொடுங்கையூர், புளியந்தோப்பு ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மாமனார் வீட்டில் இருந்த விஜயலட்சுமியை அழைத்து வர, நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ரவி மது போதையில் சென்றுள்ளார். அங்கு, மாமனார் வெங்கடேஷிடம், எனது மனைவி எங்கே என கேட்டுள்ளார். அதற்கு அவர், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவாள், என கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ரவி, என்னிடம் தெரிவிக்காமல் எப்படி போகலாம், என கேட்டு வெங்கடேஷிடம் தகராறு செய்து அடித்து உதைத்துள்ளார். பின்னர், அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மாமனார் வெங்கடேஷ் தலையில் அடித்துள்ளார்.

இதனால், காயமடைந்த வெங்கடேஷ், புளியந்தோப்பு போலீசில் புகார் செய்துவிட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனிடையே வீட்டுக்கு வந்த விஜயலட்சுமி, ‘எதற்காக எனது தந்தையை அடித்தீர்கள்’ என கேட்டு ரவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், வீட்டில் இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு, ‘இனி உன்னிடம் நான் வாழமாட்டேன்’ என கூறிவிட்டு பெற்றோர் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

விஜயலட்சுமியை பின்தொடர்ந்து வந்த ரவி, நள்ளிரவு ஒரு மணி அளவில் வியாசர்பாடி - எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மனைவியை மடக்கி, சமாதானம் செய்து, வீட்டுக்கு வர அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த ரவி, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து விஜயலட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. பின்னர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். போதையில் 3 மாத கர்ப்பிணி மனைவியை பீர் பாட்டிலால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.