நாட்டையே அதிரவைத்த தொடர் குண்டுவெடிப்பு; 38 பேருக்கு தூக்கு தண்டனை

கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்ற இந்தியா அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குண்டுவெடிப்பு வழக்கில் , 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழும் கொலைக் குற்றத்துக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302ன் கீழும் இவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதேவேளை இந்தியாவில் ஒரே வழக்கில் மிக அதிகமானோருக்கு தூக்கு விதிக்கப்பட்டுள்ளது இது முதல் முறை.

இந்த தீர்ப்பை அளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.பட்டேல், சம்பவத்தில் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜுலை 26 ஆம் திகதி அன்று அகமதாபாத் நகரில் 70 நிமிடத்தில் 21 குண்டுகள் வெடித்தது. அதில், குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் அந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியன் முஜாஹிதீன், ஹர்கத்- உல் -ஜிஹாத்-அல்-இஸ்லாமி ஆகிய தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்றிருந்தன.