இயந்திர மனிதன் ஐன்ஸ்டீனின் காதல் வாழ்வு.

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய விஞ்ஞானியும் கோட்பாடு இயற்பியலின் தந்தை என்றும் அழைக்கப்பட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னமாகியது ஹிரோசிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியாகிய அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி, விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்துச்  சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அணுகுண்டின் அடிப்படையாக கருதும் சூத்திரம் E=mc2 நிறைக்கும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் இந்த ஆற்றலைக்  கண்டுபிடித்தவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அறிவியல் கண்டுபிடிப்புகள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என்று நம்பிய இவர்தான் இருபதாம் நூற்றாண்டின் தனித்த அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ம் தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார் ஐன்ஸ்டீன். அவர் பிறந்தபோது அவர் ஒரு மேதை இல்லை. உண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் சராசரி மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டீனுக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்தபோது வயது 4. ஒருமுறை அவருக்கு காம்பஸ் என்ற திசைகாட்டி கருவியைப்  பரிசாக தந்தார் அவரது தந்தை. அதனுள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகம் நோக்கி ஈர்த்தது. பள்ளியில் தானாகவே கால்க்ளஸ் என்ற கணிதக்  கூற்றைக்  கற்றுக்  கொண்டார். அதன் பின் ஏற்பட்ட சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டார் ஆனால் ஆசிரியருக்கும் அந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் திகைத்துப்போனார். தன் சிறுவயதிலேயே வார்த்தைகளாலும், சொற்களாலும் சிந்திப்பதைக்  காட்டிலும் படங்களாகவும், காட்சிகளாகவும் சிந்தித்தார் ஐன்ஸ்டீன்.

அவர் அறிவியலில் பல கண்டுபிடிப்புகளும், சாதனைகளும் புரிந்திருந்தாலும் வாழ்க்கையில் தன் குடும்பச்  சூழலில் அவர் அதிகம் நாட்டத்துடன் இல்லை என்பதே உண்மை. வால்டர் ஐசக்சன் என்ற நூல் ஆசிரியர் உலகிலேயே மிக மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Einstein: His Life and Universe) என்ற புத்தகத்தை வெளியிட்டார். உலகிலேயே மிகப்பெரிய விஞ்ஞானியாக பார்க்கும் ஒருவர் மேல் குற்றம் சாட்டப்படும் வண்ணம் அமைந்தது இந்த புத்தகம். தனது வாழ்க்கையில் பல்வேறு கண்டுபிடிப்பிற்கும், புகழுக்கும் உரிய இவர் தன் திருமண வாழ்க்கையைச் சரி வர வாழவில்லை. ஐன்ஸ்டின் மாணவராக இருந்த போதே, அவரது அறிவாற்றலால் கவரப்பட்டு காதலியாக மாறிய மிலவா என்ற பெண்ணை அவரும் காதலித்தார். மேலும் அவர் ஐன்ஸ்டீனுடன் பணியாற்றிய பெண் தான் விஞ்ஞானி மிலவா மாரிக்கை அவரையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தினார் ஐன்ஸ்டீன்.
ஐன்ஸ்டீனின் முதல் மனைவி மிலவா
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை  பதினோரு ஆண்டு காலமே நீடித்தது. தனது மனைவிக்கு இவர் விதித்த நிபந்தனைகள் கேட்டாலே வியப்புக்குள்ளாக்குகிறது. ஐன்ஸ்டீன் தனது மனைவியை ஒரு வேலைகாரியை போலத்தான் நடத்தியுள்ளார். ஆனால் அவரது மனைவியோ தனது அன்புக்குரிய கணவனுக்கு அனைத்து வேலைகளையும் செய்துக்கொடுத்துள்ளார். ஐன்ஸ்டீன் அறைக்குச் சென்றே அவருக்கு உணவளித்துள்ளார். இந்தப் பெண் மட்டும் சாதாரணப் பெண் அல்ல ஐரோப்பாவில் முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து, விழுந்து கவனித்தவர் அவரது மனைவி மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மனைவி மிலவா மற்றும்
அவரது இரண்டு குழந்தைகள்
ஐன்ஸ்டீன் இடையில் 1912 ஆம் ஆண்டு தனது உறவினரான எல்சாவின் பக்கம் திரும்பினார். எல்சாவிடம் மாரிக் மனச்சோர்வு மற்றும் பொறாமைக்குணம் பிடித்தவள் என்று கூற ஆரம்பித்தார். மாரிக்கிடம்  விவகாரத்து கேட்டார் ஐன்ஸ்டீன். ஆனால் மாரிக் தர மறுத்து விட்டார். நீ என்னுடன் வாழ சில நிபந்தனை உண்டு என்று ஐன்ஸ்டீன் கூறினார். அந்த நிபந்தனைகள் அருகில் வந்து உட்காரக்கூடாது, வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் தெரிந்து வைத்துக் கொள்ளக்கூடாது என்று நீளுகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனைப் பட்டியல். அதையும் விட மிக முக்கியமான ஒன்று தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவரது மனைவி எதிர்பார்க்கக்கூடாது என்று கூறினார் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்கக் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று. இந்த நிபந்தனைகளையும் தாண்டி அவள் இவரை நன்கு கவனித்தாள். அவருக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்தாள். அவரின் துணிகளையும் துவைத்து தேய்த்து அவருக்கு கொடுத்து பணிவிடை செய்தாள். அவளால் முடிந்தவரையில் எந்த எதிர்பார்ப்புமின்றி அவருக்கு பணிபுரிந்தாள். ஆனால் அவளுக்கு எந்த வித கைமாறும் செய்யவில்லை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இப்படிப்பட்ட 11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்கு பின் ஐன்ஸ்டீனை விட்டு தனது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தன் பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார். ஐன்ஸ்டீனின் குழந்தைகளில் ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902 ஆம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்து கொடுத்துவிட்டனர். மாரிக் மற்றும் ஐன்ஸ்டீன் ஆகியோர் பிப்ரவரி 14, 1919 அன்று ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்தனர்.
அவரது இரண்டாவது மனைவி
எலிசாவுடன் இருக்கும் புகைப்படம்
ஐன்ஸ்டீன் ஜூன் 2, 1919 இல் எல்சாவை திருமணம் செய்தார். எனினும் அந்த இரண்டாவது திருமணமும் அவருக்கு மகிழ்ச்சி தருவதாக  அமையவில்லை. அவள் திடிரென்று மரணித்துவிட்டாள். இந்த வாழ்க்கையும் துயரில் சென்று முடிந்தது. பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு பல பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அவர் ஒரே ஒரு செயலுக்கு விசுவாசமாக இருந்தார் அது தான் இயற்பியல். பல முறை தன் திருமண வாழ்வில் தான் சரியாகத் தான் நடந்துக்கொள்கிறோம் என்று எண்ணினார். சில சமயம் அது தவறென்றும் உணர்ந்தார். பிறகு இவையெல்லாம் தன் வெற்றிக்கு இடையூறு தரும் வண்ணமாக உள்ளது என்று எண்ணி இருபது ஆண்டுகள் மனைவி, துணைவியின்றி தனியாகவே வாழ்ந்து ஏப்ரல் மாதம் 18ஆம் நாள் 1955ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
இருபது ஆண்டுகள் மனைவி
துணைவியின்றி தனியாகவே வாழ்ந்தார்.
வாழ்க்கை என்பது இரண்டு நிலைகள்தான். ஏற்றமும், தாழ்வுமே அது. அதில், சரியாகப் பயணிப்பவர்கள் வெற்றிபெறுகிறார்கள். இந்த வெற்றியின் பயணத்தில் ஐன்ஸ்டீனின் வாழ்வும் அடையும். இன்பமும், துன்பமும் அவரை எதிர்கொண்டபோது எந்த சூழ்நிலையிலும் தனது வழியை மாற்றாமல் இருந்தார். அதனால்தான் அவருக்கு மிக உயர்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிரபல விஞ்ஞானி ஆன பிறகு அவர் கூறியிருக்கிறார் –  “நான் ஒரு இயற்பியல் விஞ்ஞானி ஆகவில்லை என்றால் ஒரு இசைகலைஞனாகி இருப்பேன். நான் அடிக்கடி இசையைப்பற்றி யோசித்துக்கொண்டு இருப்பேன். என் பகல் கனவு இசையிலேயே கழியும். நான் வாழ்வை இசையின் அடிப்படையிலேயே பார்க்கிறேன். என் வயலினில் இருந்து வெளிப்படும் இசையில் நான் என் வாழ்க்கையின் அதிகப்படியான மகிழ்ச்சியினை காண்கிறேன்” என்று கூறினார். அவரது மரணம் வரை விண்வெளி மற்றும் நேரம் ஆகியவற்றின் கோட்பாடுகளுக்கான கண்டுபிடிப்பிற்கான தேடல் இருந்தது. அவர் தன்னை தானே, உடலையும் ஆத்மாவையும் விஞ்ஞானத்திற்கு விற்றுவிட்டதாக ஒருமுறை சொன்னார். ஆனால் கண்டுபிடித்த இராட்சத விஞ்ஞானம் மனித இனத்தின் பல வழிகளில் பயன்பட்டிருந்ததாலும் அவர் சாதாரண மனித இனமானதால் அவர் மீதும் பல குற்றச்சாட்டுகளும் தவறுகளும் இருக்கத்தான் செய்கிறது.