ஆயுத விற்பனையில் முதல் 100 நிறுவனங்களின் பட்டியல்: 41 அமெரிக்க நிறுவனங்களுக்கு இடம்

ஆயுதங்களை விற்பனை செய்வதில் முன்னிலை வகிக்கும் 100 நிறுவனங்கள் பட்டியலில் ஏச்ஏஎல் உட்பட 3 இந்திய நிறு வனங்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் 2020ம் ஆண்டில் ஆயுதங்களை விற்பனை செய்த 100 முன்னணி நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்),

இந்திய ஆர்டினன்ஸ் ஆலைகள் (ஐஓஎப்), பாரத்எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) ஆகிய 3 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. 2019ம் ஆண்டிலும் இந்த 3 நிறுவனங்களும் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

குறித்த பட்டியலில் எச்ஏஎல் நிறுவனம் 42-வது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் 297 கோடி டொலருக்கு ஆயுதங்களை சப்ளை செய்துள்ளது. இது 2019-ம் ஆண்டை விட 1.5 சதவீதம் அதிகமாகும். இந்திய ஆர்டினன்ஸ் தொழிற்சாலை 60-வது இடத்தில் உள்ளது.

இந்த நிறுவனம் 190 கோடி டொலருக்கு ஆயுதங்கள் விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.2% அதிகமாகும். பிஇஎல் 66-வது இடத்தில் உள்ளது. இது 163 கோடி டொலர் அளவுக்கு விற்பனை செய்துள்ளது.

இது முந்தைய ஆண்டைவிட 4% அதிகம். ஆயுத உற்பத்தி நாடுகளில் மிகக் குறைந்த அளவில் ஏற்றுமதிசெய்யும் 11 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறித்த பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த 41 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், மிக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களைக் கொண்டநாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.

இவற்றின் மொத்த வர்த்தகம் 28,500 கோடி டொலராகும். முந்தைய ஆண்டை விட 1.9 சதவீதம் அதிகமென தெரியவந்துள்ளது. ஆயுத விற்பனையில் அமெரிக்க நிறுவனங்களின் பங்கு 54 சதவீதமாகும். சீனா 13 சதவீத பங்களிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளது.

இங்கிலாந்து 7.1 சதவீதத்துடன் மூன்றாமிடத்திலும், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் முறையே 4-வது மற்றும் 5-ம் இடத்திலும் உள்ளன. சீன நிறுவனங்களின் ஒட்டுமொத்த வர்த்தக அளவு 6,680 கோடி டொலராகும்.