காதலனுடன் மகள் சென்ற அந்தநாள்..! ஆணவக்கொலை

அரியலூரில் நந்தினி, பெரம்பலூரில் ஐஸ்வர்யா என சாதியக்கொலைகள் தமிழ்நாட்டில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குரும்பலூரில் தலித் பெண் ஐஸ்வர்யா மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது, தேசிய ஆதிதிராவிட ஆணையம் இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. வழக்கை விசாரித்த ஆதிதிராவிட அதிகாரிகள், பகீரங்கமாக காவல்துறை மீது குற்றம்சாட்டியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அவர்கள் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாமல் காவல்துறையும் திணறியது.

கடந்த வாரம் ஐஸ்வர்யா இறந்தபோது காவல்துறை தற்கொலை வழக்காகத்தான் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் பல்வேறு சந்தேகம் உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளும் தொடர் போராட்டத்தில் இறங்கியபிறகு எஸ்.சி, எஸ்,டி வன்கொடுமை சட்டத்தில் வழக்கைப் பதிவு செய்தது காவல்துறை. அதன் பெயரில் தேசிய ஆதிதிராவிட ஆணையம் விசாரிக்க களத்தில் இறங்கியுள்ளது.

நேற்று மதியம் ஐஸ்வர்யாவின் குடும்பத்தைச் சந்திக்கவந்த தேசிய ஆதிதிராவிட ஆணையத்தை சேர்ந்த இனியன், லிஸ்டர் இருவரும், ஐஸ்வர்யாவின் பெற்றோர் தங்கவேல்-மல்லிகா ஆகியோரிடம் பேசினர். அப்போது, “எனது மகளை கொன்றுவிட்டார்கள். இதற்கு காவலர்கள் உடந்தையாக இருக்கிறார்கள். எனது மகள் சாவில் நிறைய மர்மங்கள் இருக்கிறது” என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

மேலும், ஐஸ்வர்யாவின் தாயார் மல்லிகா கூறுகையில், “நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபனும், எனது மகளும் மனதார காதலித்துள்ளார்கள். கடந்த 12-ம் தேதி எனது மகளோடு பார்த்திபன் அவனது வீட்டுக்கே சென்றுள்ளார். அதன் பிறகு எனது மகள் வீடு திரும்பவில்லை. கடந்த 16-ம் தேதி மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் உடலில் காயங்களோடு எனது மகள் கிணற்றில் இறந்து கிடந்தாள்.

மகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார் என்று காவல்துறை சொல்கிறது. ஐஸ்வர்யா சாகப்போகும்போது மொட்டை அடித்துக்கொண்டா சாகப்போவாள். கிணற்றிலிருந்து இருபது அடிதூரத்தில் அவளுடைய தலைமுடி கிடக்கிறது. கடைசியாக அணிந்திருந்த ஹேர்பேண்ட் அதில் இருக்கிறது. அது எப்படி. அவளுக்கு யார் மொட்டை அடித்தது; மொட்டை அடிக்க என்ன காரணம். கிணற்றின் மேல் கட்டை உள்ளது.

அதிலிருந்து இறங்கி செருப்பை ஒன்றாக சேர்த்து வைத்துள்ளார்கள். அவள் அணிந்திருந்த ஷால் மடித்து வைக்கப்பட்டிருக்கிறது. பஸ் டிக்கெட் மற்றும் பதினைந்து ரூபாய் பணம் காற்றில் பறந்துவிடாமல் இருக்க கல்லை எடுத்து வைத்துவிட்டா சாகப்போவாள். அந்த கிணறு பயனற்றுக்கிடக்கிறது. நான்கு அடிக்கு குறைவாகத்தான் தண்ணீர் உள்ளது. அதில் எப்படி மூழ்கி சாகமுடியும்.

அதேபோல், கடந்த 15-ம் தேதி இரவு மகள் இறந்துக்கிடந்த கிணற்றுக்கு அருகில் நான்கைந்து பேர் செல்போனில் உள்ள டார்ச்சை அடித்துக்கொண்டிருப்பதை ஆடு மேய்த்தவர் பார்த்துள்ளார். அவர்கள் யார்; இறப்பதற்கு முன் ஐஸ்வர்யா, பார்த்திபனின் அப்பா சின்னசாமியிடம் பேசியிருக்கிறார். அங்கு என்ன நடந்தது; சம்பவம் நடக்கும் முதல்நாள் இரவு வேப்பந்தட்டையில் ஏர் டிக்கெட் புக்பண்ணி பெரியவடகரையிலுள்ள பார்த்திபனின் அக்கா வீட்டில் தங்கியிருந்து வெளிநாட்டுக்குச் செல்ல என்ன காரணம். இவ்வளவு கேள்விகள் எங்களுக்குள் எழுகிறது.

ஆனால் காவல்துறையினர் உடலைப் பார்த்த ஐந்து நிமிடத்தில் தற்கொலை என்று சொல்கிறார்கள். இது எப்படி. எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தால் ஏ-1 குற்றவாளி பார்த்திபன், ஏ-2 அவரது அப்பா சின்னசாமி, ஏ-3 அவரது அம்மா செல்லப்பாப்பு.
இவர்கள் யாரையும் காவல்துறை அழைத்து விசாரிக்காதது ஏன். அதுமட்டுமில்லாமல் அந்த குடும்பத்துக்கு ஒண்ணும் தெரியாது என்று எங்களிடம் சொல்கிறார்கள். இவர்களைக் காப்பாற்ற ஏன் துடிக்கிறார்கள். காதலுக்கு உதவியதாக சரண்ராஜ் மீது வழக்குப்போட்டு சிறையில் அடைத்திருக்கிறது.

காவல்துறை. சம்பந்தப்பட்டவர்களை யாரையும் விசாரிக்காமல் இவனை மட்டும் கைது செய்தது ஏன். இதுபோன்று பல விதத்திலும் எங்களுக்குச் சந்தேகம் எழுந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், காவல்துறையின் நடவடிக்கையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என்று கூறியுள்ளார்
.
பின்பு பார்த்திபன் வீட்டில் விசாரணை நடத்திய தேசிய ஆதிதிராவிட ஆணைய உறுப்பினர்கள், ஐஸ்வர்யா இறந்துக்கிடந்த கிணற்றைப் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஆதிதிராவிட ஆணைய உறுப்பினர் இனியன், “ஐஸ்வர்யா இறப்பில் மர்மம் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது, ஏன் அவர்கள் சொல்வதன்பேரில் காவல்துறை விசாரித்திருக்கக்கூடாது.

இந்த வழக்கைப் பொறுத்தவரையில் காவல் துறையினர் ஏன் தாமதமாக செயல்பட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. வழக்கைத் துரிதமாக விசாரிக்கவேண்டும். நடந்த பிரச்னைகள் குறித்து இருதரப்பையும் விசாரித்துவிட்டு அறிக்கை தாக்கல்செய்ய உள்ளோம்” என்றார்.